72 மணிநேரம்... தேவையான உணவு, தண்ணீரை சேமித்து வைக்க மக்களுக்கு அறிவுறுத்திய ஐரோப்பா
அவசரநிலைகள் ஏற்பட்டால் குறைந்தபட்சம் 72 மணிநேரங்களுக்கு போதுமான உணவு, தண்ணீரை சேமித்து வைக்க பொதுமக்களை ஊக்குவிக்க வேண்டும் என ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பு
அத்துடன் முக்கியமான உபகரணங்களின் இருப்பை ஐரோப்பா அதிகரிக்க வேண்டும் என்றும் ஐரோப்பிய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு எதிராக ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல் உட்பட, இயற்கை பேரழிவுகள், சைபர் தாக்குதல்கள் மற்றும் புவிசார் அரசியல் நெருக்கடிகள் உள்ளிட்ட அபாயங்களை எதிர்கொள்ள ஐரோப்பிய நாடுகள் தயாராகி வருகிறது.
இந்த நிலையிலேயே ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் அறிக்கை ஒன்றில் குறிப்பிடுகையில், வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளில் வசிக்கும் குடும்பங்கள் நீர்மட்டம் உயரும்போது என்ன செய்வது என்பதை அறிந்திருக்க வேண்டும் எனவும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகள் விலைமதிப்பற்ற நேரத்தை இழப்பதை முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்புகள் தடுக்க வேண்டும் என்றும் பதிவு செய்துள்ளார்.
மட்டுமின்றி, இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியுள்ள மக்களுக்கு மருத்துவ உதவி, குடிநீர் மற்றும் ஆபத்தான கட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பிலும் தயார்படுத்த போதுமான நடவடிக்கைகள், எச்சரிக்கை அமைப்புகளை உருவாக்க ஐரோப்பிய ஒன்றியத்தால் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
நெருக்கடியான சூழ்நிலையில்
ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு பகுதியிலும் அச்சுறுத்தலும் சிக்கலும் வேறுபட்டவை, ஆனால் அனைத்து குடிமக்களும் அவசரநிலைகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்க முயற்சி செய்ய வேண்டும் என்றே தயார்நிலை மற்றும் நெருக்கடி மேலாண்மைக்கு பொறுப்பான ஐரோப்பிய ஆணையர் Hadja Lahbib தெரிவித்துள்ளார்.
எதற்கும் தயாராக இருத்தல் வேண்டும், இதுவே இனி நமது வாழ்க்கை முறை என்றும் அவர் தமது சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, குறைந்தபட்சம் 72 மணிநேரத்திற்கு ஐரோப்பிய மக்கள் அனைவரையும் தன்னிறைவை அடைவதற்கான வழிகாட்டுதல்களை ஆணையம் தற்போது உருவாக்கி வருகிறது.
ஆணையர் Hadja Lahbib பதிவு செய்துள்ள காணொளியில், நெருக்கடியான சூழ்நிலையில் 72 மணிநேரம் உயிர்வாழ தேவையான உணவு, தண்ணீர், டார்ச் லைட், பவர் பேங்க், ரேடியோ, பணம் மற்றும் மருந்துகள் என முக்கியமான பொருட்களை பட்டியலிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |