2027-க்குள் ரஷ்ய எரிவாயு இறக்குமதிக்கு முழு தடை- ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்
ஐரோப்பிய ஒன்றியம் (EU) எரிவாயுவிற்காக ரஷ்யாவை சார்ந்திருப்பதை முற்றிலும் துண்டிக்க முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
27 உறுப்புநாடுகள், 2027 செப்டம்பர் 30-க்குள் ரஷ்ய எரிவாயு இறக்குமதியை முழுமையாக தடைசெய்யும் சட்டத்திற்கு இறுதி ஒப்புதல் அளித்துள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் படி, திரவ இயற்கை எரிவாயு (LNG) இறக்குமதி 2026 இறுதிக்குள் நிறுத்தப்படும். பின்னர், குழாய் வழி எரிவாயு 2027 செப்டம்பர் 30-க்குள் தடை செய்யப்படும்.
தேவையெனில், குளிர்கால சேமிப்பு சவால்களை சமாளிக்க, இந்த திகதி நவம்பர் 1, 2027 வரை நீட்டிக்கப்படலாம்.

ஐரோப்பிய கவுன்சில் தெரிவித்ததாவது:
“உறுப்புநாடுகள் மார்ச் 1-க்குள் புதிய எரிவாயு ஆதாரங்களைத் தேடும் தேசிய திட்டங்களை உருவாக்க வேண்டும்.” மேலும், எரிசக்தி பாதுகாப்பு கடுமையாக பாதிக்கப்பட்டால், தடை நான்கு வாரங்களுக்கு இடைநிறுத்தப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த முடிவுக்கு ஹங்கேரி மற்றும் ஸ்லோவாகியா எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இரு நாடுகளும் ரஷ்ய எரிவாயுவை அதிகமாக சார்ந்திருப்பதால், தடை அவர்களின் பொருளாதாரத்திற்கு சவாலாக இருக்கும். ஹங்கேரி, இந்த சட்டத்தை ஐரோப்பிய நீதிமன்றத்தில் எதிர்க்கும் என அறிவித்துள்ளது.
ரஷ்யா 2022-ல் உக்ரைனில் முழுமையான படையெடுப்பைத் தொடங்கும் முன், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தேவையான எரிவாயுவில் 40 சதவீதம் ரஷ்யாவிலிருந்து வந்தது. ஆனால் 2025-க்குள் அது 13 சதவீதமாகக் குறைந்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |