தடுப்பூசி தயாரிக்க தேவையான முக்கிய மூலப்பொருட்களை ஐரோப்பா-அமெரிக்கா தடுத்து வைத்திருக்கிறது! இந்திய பரபரப்பு குற்றச்சாட்டு
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா தடுப்பூசி பொருட்களை தடுத்து வைத்திருப்பதாக இந்திய மருந்து நிறுவனமான சீரம் குற்றம் சாட்டியுள்ளது.
அஸ்ட்ராஜெனெகாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசியை உலகளாவிய அளவில் தயாரிக்க உரிமம் பெற்ற இந்திய மருந்து நிறுவனமான சீரம், ஐரோப்பாவும் அமெரிக்காவும் தடுப்பூசி உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருட்களைத் தடுத்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.
இதனால், உற்பத்தி திறனில் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைவர் ஆதர் பூனவல்லா கூறியுள்ளார்.
தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தியதற்காக சீரம் நிறுவனம் வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
சீரம் நிறுவனம் ஒரு மாதத்திற்கு 60 மில்லியனுக்கும் அதிகமான டோஸ்களை உற்பத்தி செய்கிறது, ஆனால் இந்தியாவின் தேவைக்கு முன்னுரிமை அளிக்கும்படி தனக்கு உத்தரவு விடப்பட்டுள்ளதாக ஆதர் பூனவல்லா கூறினார்.
பல இந்திய மாநிலங்கள் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன, அவை சில நாட்களில் டோஸ்கள் முடிந்துவிடும் என்று கூறியுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் 1,26,000 க்கும் அதிகமான தொற்றுகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
