போருக்கு தயாராகும் ஐரோப்பா? 40,000 வீரர்களை கிழக்கு எல்லைக்கு அனுப்பிய போலந்து
ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கு இடையே முன்னெடுக்கப்படவிருக்கும் மிகப்பெரிய இராணுவப் பயிற்சியை எதிர்கொள்ளும் வகையில் போலந்து தனது 40,000 வீரர்களை கிழக்கு எல்லைக்கு அனுப்பியுள்ளது.
எல்லையை மூடுவதாக
போலந்து வான்பரப்பில் ரஷ்ய ட்ரோன்கள் அத்துமீறியுள்ளதை அடுத்து, ஐரோப்பிய நாடுகள் உயர்மட்ட எச்சரிக்கை நிலையில் கொண்டுவரப்பட்டது. மட்டுமின்றி, இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் மேற்கத்திய நாடுகள் மிக நெருக்கடியான ஒரு கட்டத்தில் பயணிப்பதாக போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.
Zapad 2025 என்ற ரஷ்ய - பெலாரஸ் கூட்டு இராணுவப் பயிற்சி காரணமாக பெலாரஸ் உடனான எல்லையை மூடுவதாகவும் டஸ்க் அறிவித்துள்ளார். இதன் ஒருபகுதியாகவே 40,000 வீரர்களை எல்லைக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் ஒருமுறை ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகள் கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 2021ல் நடந்த கூட்டு இராணுவப் பயிற்சியை அடுத்தே, பல மாதங்களுக்குப் பிறகு பெலாரஸ் வழியாக ரஷ்ய படைகள் ஊடுருவி உக்ரைன் மீது தாக்குதல் தொடங்கியது.
பாதுகாப்பு அரணாக
தற்போது மீண்டும் இந்த இரு நாடுகளும் கூட்டு இராணுவப் பயிற்சிகளுக்கு தயாராகின்றன. இது கண்டிப்பாக ரஷ்யாவின் இன்னொரு நகர்வுக்கான மறைமுக திட்டமாக இருக்கலாம் என முன்னாள் நேட்டோ அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை தொடங்கி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரையில் முன்னெடுக்கப்படும் இந்த கூட்டு இராணுவப் பயிற்சி நாட்களில் நமது பாதுகாப்பு அரணாக நேட்டோ இருக்கும் என ஜேர்மனியின் பாதுகாப்புத் தலைவர் கார்ஸ்டன் ப்ரூயர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஐரோப்பாவில் ரஷ்யாவும் ஆசியாவில் சீனாவும் ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தினால் மூன்றாம் உலகப் போர் வெடிக்கக்கூடும் என்று நேட்டோ தலைவர் மார்க் ரூட் எச்சரித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |