ஹார்முஸ் விவகாரம்... ஈரானுக்கு சாதகமான முடிவெடுக்க இருக்கும் ஐரோப்பா
ஹார்முஸ் நீரிணையைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குத் தன்னார்வ வழிசெலுத்தல் சேவைக் கட்டணங்களை அறிமுகப்படுத்தக்கூடிய திட்டங்களை ஐரோப்பிய நாடுகள் ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேரழிவை ஏற்படுத்தும்
சுங்கக் கட்டணங்கள் கட்டாயமற்றவையாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் கடல்சார் அமைப்பின் ஆதரவைப் பெற்றவையாகவும் இருக்கும் பட்சத்தில் ஈரானின் கட்டணம் வசூலிக்கும் திட்டம் சாத்தியம் என்றே கூறப்படுகிறது.

மத்திய கிழக்கில் இஸ்ரேல் உருவாக்கியுள்ள மிக ஆபத்தான நெருக்கடியைத் தொடர்ந்து, உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றில் நிலவும் பதற்றங்களுக்கு நீண்டகாலத் தீர்வைக் காண நிபுணர்கள் தரப்பு முயன்று வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகளால் இந்த முன்மொழிவு பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்வதற்கு கட்டாயக் கட்டணம் விதிப்பது பேரழிவை ஏற்படுத்தும் என்று பிரித்தானியாவின் துணைப் பிரதமர் டேவிட் லாமி எச்சரித்துள்ளார்.
இருப்பினும், மலாக்கா நீரிணை மற்றும் ஆங்கிலக் கால்வாய் உள்ளிட்ட பல சர்வதேச நீர்வழிகளில், குறிப்பிட்ட கப்பல் போக்குவரத்து தொடர்பான சேவைகளுக்குக் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதை பிரித்தானிய அரசாங்கத்தின் சில உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், பிரித்தானியாவின் சட்ட நிபுணர்களுடன் இணைந்து, மலாக்கா நீரிணையில் பின்பற்றப்படும் கூட்டுறவு முறையை முன்மாதிரியாகக் கொண்ட ஒரு நிர்வாகத் திட்டத்தை ஓமன் உருவாக்கி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஓமனுக்குப் பயணம்
மேலும், கட்டாயப் போக்குவரத்துக்கட்டணங்களுக்குப் பதிலாகக் கடல்சார் சேவைகளுக்கான தன்னார்வப் பங்களிப்புகளை அடிப்படையாகக் கொண்ட செயல்முறையை விளக்குவதற்காக, சட்ட நிபுணர்களை ஈரானுக்கு அனுப்பவும் ஓமன் நிர்வாகம் முன்வந்துள்ளது.
இதனிடையே, ஹார்முஸ் நீரிணையின் எதிர்காலம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக, ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஓமனுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அந்த நீரிணையில் கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பெரும்பாலான நீர்ப்பகுதிகளை ஓமன் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதுடன், கட்டாயக் கட்டண முறை எதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
மட்டுமின்றி, முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழியின் மீது ஈரானின் அதிகாரத்தை விரிவுபடுத்தக்கூடிய முன்மொழிவுகள் குறித்தும் கத்தார் நிர்வாகமும் கவலை தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |