ஐரோப்பா முழுவதும் பரபரப்பு - வெடிகுண்டு மிரட்டலால் பல விமானங்கள் அவசரமாக தரையிறக்கம்
Europe Flights Diverted After Bomb Threat Alerts: ஐரோப்பாவின் பல நாடுகளில் வெடிகுண்டு மிரட்டல்கள் காரணமாக பயணிகள் விமானங்கள் திடீரென திசைதிருப்பப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நாளில் குறைந்தது 12 பயணிகள் விமானங்கள் பாதுகாப்பு காரணங்களால் மாற்று விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அயர்லாந்தின் Aer Lingus நிறுவனத்துக்கு சொந்தமான டப்ளினில் இருந்து ரோம் நோக்கி சென்ற EI402 விமானம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரான்சின் எவ்ரூ விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது. பின்னர் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.
இதேபோல், Finnair நிறுவனத்தின் ஹெல்சிங்கியிலிருந்து ரோம் சென்ற விமானம், இத்தாலிய விமானப்படை போர் விமானங்களின் பாதுகாப்பு கண்காணிப்புடன் ரோம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனைகளில் எந்தவித வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை.
பெல்ஜியத்தில் LOT Polish Airlines விமானமும் பாதுகாப்பு எச்சரிக்கையையடுத்து தரையிறக்கப்பட்டது. சோதனைக்குப் பிறகு சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பல்கேரியாவிலும் மூன்று விமானங்கள் வெடிகுண்டு மிரட்டலால் அவசரமாக தரையிறக்கப்பட்டன. டென்மார்க், ஸ்பெயின் மற்றும் பிரித்தானியாவில் இருந்து புறப்பட்ட விமானங்கள் பாதுகாப்பு நடைமுறைகளுக்காக தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், செக் குடியரசின் தலைநகர் பிராக் நோக்கிச் சென்ற நான்கு விமானங்களுக்கும் வெடிகுண்டு தொடர்பான அச்சுறுத்தல்கள் கிடைத்ததாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்தது. இருப்பினும், இந்த மிரட்டல்கள் குறைந்த ஆபத்துடையவை என மதிப்பிடப்பட்ட போதிலும், அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கிடையில், மிலானில் இருந்து புக்கரெஸ்ட் சென்ற Wizz Air விமானத்தில் இருந்த சுமார் 200 பயணிகள் வெளியேற்றப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது.
கடந்த வாரத்திலும் பல விமானங்கள் மற்றும் ஒரு கப்பலுக்கு இதேபோன்ற மிரட்டல்கள் வந்த நிலையில், தற்போதைய சம்பவங்கள் ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்புகளுக்கு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை எந்த விமானத்திலும் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், இந்த மிரட்டல்களின் பின்னணி குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |