1000 கிமீ பயணம் 4 மணி நேரத்தில் - பல நாடுகளை இணைக்கும் ரயில் திட்டம்
பல நாடுகளின் முக்கிய நகரங்களுக்கு பயண நேரத்தை பாதியாக குறைக்கும் ரயில் திட்டத்தை ஐரோப்பிய ஆணையம் அறிவித்துள்ளது.
பாதியாக குறையும் பயண நேரம்
ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் அதிவேக ரயில் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான ஒரு விரிவான திட்டத்தை ஐரோப்பிய ஆணையம் வெளியிட்டுள்ளது.

இந்த அதிவேக ரயில் திட்டம் பல ஐரோப்பிய நாடுகளின் முக்கிய நகரங்களை இணைப்பதோடு, அதன் பயண நேரத்தை பாதியாக குறைக்கும் என கூறப்படுகிறது.
இந்த திட்டத்தில், ரயில்கள் மணிக்கு 250 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் உடையவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, பெர்லினிலிருந்து கோபன்ஹேகன் வரை செல்ல 7 மணி நேரம் எடுக்கும் நிலையில், இந்த பயண நேரம் எதிர்காலத்தில் 4 மணி நேரமாக குறைக்கப்படும்.

அதே போல், சோபியா முதல் ஏதென்ஸ் வரையிலான பயண நேரம் தற்போது 14 மணி நேரமாக உள்ள நிலையில் 6 மணி நேரமாக குறைக்கப்படும்.
2040 ஆம் ஆண்டில் பயன்பாடு

இந்த திட்டம், 2030 மற்றும் 2035 காலப்பகுதியில் பல நாடுகளில் செயல்பட தொடங்கி விடும். 2040 ஆம் ஆண்டில் திட்டம் முழுமையாக பயன்பாட்டிற்கு வரும்.
இந்த அதிவேக ரயில்கள் தடையற்ற இணைப்பை வழங்கும், கண்டம் முழுவதும் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் கலாச்சார பரிமாற்றத்தை அதிகரிக்கும் என்று ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.
டிரான்ஸ்-ஐரோப்பிய போக்குவரத்து வலையமைப்பு (TEN-T) திட்டத்தின் ஒரு பகுதி ஆகும்.
இது கண்டம் முழுவதும் ஒருங்கிணைந்த போக்குவரத்து உள்கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதற்கான டிக்கெட் விலை விவரங்கள் தற்போது வரை வெளியாகவில்லை. எனினும், அதிவேக ரயில் அனைத்து வகுப்பு பயணிகளுக்கும் மலிவாக மற்றும் அணுகக்கூடிய விருப்பத்தை வழங்கும் என ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |