புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தி என்ன சாதித்தீர்கள்: பிரான்ஸ் ஜனாதிபதியை வெளுத்துவாங்கிய ஐரோப்பிய தலைவர்
எத்தனை முறை புடினுடன் பேச்சு வார்த்தை நடத்துவீர்கள்?
இத்தனை முறை பேச்சு வார்த்தை நடத்தி நீங்கள் என்ன சாதித்தீர்கள்?
புடினுடைய நடவடிக்கைகள் எதையாவது உங்களால் தடுத்து நிறுத்த முடிந்ததா? என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்துவிட்டார் போலந்து பிரதமரான Mateusz Morawiecki.
அத்துடன் நிறுத்தவில்லை அவர். குற்றவாளிகளுடன் எல்லாம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கக்கூடாது. அவர்களை எதிர்த்து போரிடவேண்டும். யாரும் ஹிட்லருடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கவில்லை. நீங்கள் ஹிட்லருடன் பேச்சு வார்த்தை நடத்துவீர்களா? என மேக்ரானை வெளுத்துவாங்கிவிட்டார் Morawiecki.
அவரது விமர்சனத்துக்கு பதிலளித்துள்ள பிரெஞ்சு ஜனாதிபதி மாளிகை, மேற்கத்திய நாடுகளின் கோரிக்கைகள் என்ன, அவற்றை ரஷ்யா நிராகரிப்பதால் என்ன இழப்பு என்பதை புடினை புரிந்துகொள்ளச் செய்வது அவசியம் என்றும், ஆரம்பத்திலிருந்தே, பெரிய தடைகள், உக்ரைனுக்கு ஆதரவு, புடினிடம் தொலைபேசி வாயிலாக பேசும்போது நேரடியாக கோரிக்கைகள் என, புடினை போரை நிறுத்தச் செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் பிரான்ஸ் ஜனாதிபதி மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.
உண்மையில், Kyivக்கும் மாஸ்கோவுக்கும் பலமுறை பயணம் செய்த மேக்ரான், 16 முறை புடினுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியதை மறுப்பதற்கில்லை.
இதற்கிடையில், உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்ட அராஜக செயல்களுக்கு பதிலடியாக, ரஷ்ய தூதர்கள் 35 பேரை பிரான்சிலிருந்து வெளியேற்ற அந்நாடு முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.