உக்ரைன் போரின் நடுவே... ரஷ்யாவுக்கு பல நூறு பில்லியன் டொலரை அள்ளிக்கொடுத்த ஐரோப்பா
Europe Spent More On Russian Fuel Than Ukraine Aid: உக்ரைனுக்கான உதவியை விட, ரஷ்ய எரிபொருளுக்காக ஐரோப்பா அதிக செலவு செய்தது.
உக்ரைன் போரில் அந்த நாட்டிற்கு அளித்த உதவிகளை விட, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிற்கு பல பில்லியன் டொலர்கள் தொகையைக் கொட்டிக்கொடுத்துள்ளதாக அமெரிக்கத் தூதர் ஜாரெட் குஷ்னர் விமர்சித்துள்ளார்.
ஒரு மறைமுகப் போர்
உக்ரைன் விவகாரத்தில் எந்தவொரு மோசமான நெருக்கடியும் ஏற்படக்கூடாது என எச்சரித்த ஜாரெட் குஷ்னர், இந்த மோதலை, ஐரோப்பா ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனுக்கு நிதியுதவி அளித்து ஆயுதம் வழங்கும் ஒரு மறைமுகப் போர் என்றும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மருமகனும், உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் சிறப்பு தூதராக செயல்பட்டு வருபவருமான ஜாரெட் குஷ்னர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில், ஐரோப்பாவின் நிலை தொடர்பில் வெளிப்படுத்தியுள்ளார்.
உக்ரைன் விவகாரம் மிகப் பெரிய அளவில் தீவிரமடைவதற்கு, சிறிதளவு தவறான கணிப்பே போதுமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனது சக தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் உடன் இணைந்து நடத்திய பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள், உக்ரைன் மற்றும் ரஷ்ய தரப்பினருக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளைக் களைவதில் தோல்வியடைந்த நிலையில்,
கிழக்கு உக்ரைனில் ரஷ்யா உரிமை கோரும் பிராந்திய விவகாரம் இன்னும் ஒரு தீர்க்கப்படாத சிக்கலாகவே நீடிக்கிறது என்பதை குஷ்னர் ஒப்புக்கொண்டார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் அதிகாரிகளுடன் பல மணி நேரம் ஆலோசனைகள் நடத்தியும், பிராந்திய விவகாரம் தற்போது ஒருவித முட்டுக்கட்டையான நிலையில் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
முன்பு உக்ரைனிடம் இருந்து கிரிமியாவைப் பறித்துக்கொண்ட ரஷ்யா, தற்போது வளர்ச்சி கண்ட இன்னொருப் பிராந்தியத்தைக் கோருகிறது. ஆனால், உக்ரைன் தரப்பில் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவ்க்கப்பட்டு வருகிறது.
250 பில்லியன் டொலர்
இதனிடையே, உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் அதே வேளையில், ரஷ்ய எரிசக்திக்காகத் தொடர்ந்து பெருமளவு பணத்தைச் செலவழிப்பது பாசாங்குத்தனம் என்று குஷ்னர் ஐரோப்பியர்கள் மீதும் குற்றம் சாட்டியுள்ளார்.

உக்ரைன் போர் தொடங்கிய 2022 முதல் இதுவரை 250 பில்லியன் டொலருக்கும் அதிகமானத் தொகைக்கு ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை ஐரோப்பா முன்னெடுத்துள்ளதாக குஷ்னர் தெரிவித்துள்ளார்.
தாம் பார்வையிட்டுள்ளத் தரவுகள் சரியாக இருந்தால், இந்த மோதலின் போது ஐரோப்பா, உக்ரைனுக்குக் கொடுத்ததை விட ரஷ்யாவிற்கு அதிகப் பணத்தை அள்ளிக்கொடுத்துள்ளது என்று நான் நினைக்கிறேன் என்றார்.