ரஷ்ய படையெடுப்பு... கட்டுக்கதைகளைப் பரப்பும் ஐரோப்பிய நாடுகள்: புடின் குற்றச்சாட்டு
ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் தொடுக்கலாம் என பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி தங்கள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகள் கட்டுக்கதைகளைப் பரப்பி வருவதாக புடின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தயார் நிலையில் இருக்க
சீன விஜயத்தின் போது பேசிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்யா ஒரு நாள் ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல் தொடுக்கும் என ஐரோப்பியத் தலைவர்கள் கட்டுக்கதைகளைப் பரப்பி வருகின்றனர் என்றார்.
ஐரோப்பாவில் உடனடிப் போருக்கான வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டு, தயார் நிலையில் இருக்க நேற்று பிரெஞ்சு மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டது, அதே நேரத்தில் ரஷ்யாவின் இராணுவப் பயிற்சிகள் தொடர்பில் தாங்கள் எச்சரிக்கையாக இருப்பதாக ஜேர்மனியும் கூறியிருந்தது.
மார்ச் 2026 க்குள் ஒரு சாத்தியமான போருக்கு தயாராகுமாறு நாடு முழுவதும் உள்ள சுகாதார அமைப்புகளிடம் பிரான்சின் சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டது. பிரான்ஸ் மற்றும் வேறு ஐரோப்பிய நாடுகளின் காயம்பட்ட இராணுவ வீரர்களை அனுமதிக்கும் வகையில், பிரான்ஸ் மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என பிரெஞ்சு அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதனிடையே, ரஷ்ய இராணுவப் பயிற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் நேட்டோவும் ஜேர்மனி இராணுவமும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஜேர்மனியின் பாதுகாப்புத் தலைவர் Carsten Breuer தெரிவித்திருந்தார்.
எப்போதும் எதிர்த்ததில்லை
ரஷ்யா பெலாரஸில் ஜபாட் 2025 பயிற்சியுடன் இராணுவப் பயிற்சியையும் நடத்தும்போது, விளாடிமிர் புடினின் படைகள் நேட்டோ பிரதேசத்தைத் தாக்கும் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என்றே Carsten Breuer தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், உக்ரைன் தொடர்பில் முதல் முறையாக மிகப்பெரிய கருத்து ஒன்றை விளாடிமிர் புடின் பதிவு செய்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவதை தாம் எப்போதும் எதிர்த்ததில்லை என குறிப்பிட்டுள்ள புடின்,
ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும் என்றே வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய நெருக்கடி முடிவுக்கு வந்தால் உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே புடின் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |