ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய தலைவர்கள் ஒருமித்த முடிவு... இது சரியான நேரம் அல்ல
பாரிஸ் உச்சிமாநாட்டில் உக்ரைனுக்கு தங்கள் ஆதரவை ஐரோப்பிய தலைவர்கள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ரஷ்யாவிற்கு எதிரான தடைகளை நீக்குவதற்கான நேரம் இதுவல்ல என்றும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
தடைகளை நீக்குவதில்லை
ஆனால் போர்நிறுத்தத்தை உறுதிசெய்ய உதவும் ஒரு உறுதியளிக்கும் படைக்கான பிரான்ஸ்-பிரித்தானியா முன்வைக்கும் திட்டங்களில் வேறுபட்ட கருத்து தீர்க்கப்படாமல் உள்ளது.
உக்ரைன் தொடர்பில் அமைதி உறுதி செய்யப்படும் வரையில் ரஷ்யா மீதான தடைகளை நீக்குவதில்லை என இருபதுக்கும் மேற்பட்ட நாட்டுத் தலைவர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் ஒருமனதாக ஒப்புக்கொண்டது என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தத்தை உறுதி செய்ய ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் நீக்க வாய்ப்புள்ளதாக பரவலாக எழுந்த சந்தேகங்களுக்கு மத்தியில் பாரிஸ் உச்சிமாநாடு முன்னெடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, நேட்டோவின் பொதுச் செயலாளர் மார்க் ரூட் மற்றும் ஐரோப்பிய ஆணையம் மற்றும் கவுன்சிலின் தலைவர்கள், பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான், பிரித்தானியப் பிரதமர் ஸ்டார்மர் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.
புடின் நல்லெண்ணத்துடன்
இந்த நிலையில், நிபந்தனையற்ற 30 நாள் போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள உக்ரைனுக்கு தைரியம் இருந்தது என்று உச்சிமாநாட்டிற்குப் பிறகு ஜனாதிபதி மேக்ரான் குறிப்பிட்டார். ஆனால் அமைதியை விரும்பும் நிலையில் இருந்திருந்தால் ரஷ்யா தரப்பில் இருந்து பதில் வெளியாகியிருக்கும், இதுவரை அதற்கான அறிகுறிகள் இல்லை என்றே மேக்ரான் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஐரோப்பா தரப்பில் இருந்து ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை மேலும் அதிகரிக்கும் திட்டமிருப்பதாக பிரித்தானியப் பிரதமர் ஸ்டார்மர் குறிப்பிட்டுள்ளார். மேலும், புடின் நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்று தான் நம்பவில்லை என்றும் ஸ்டார்மர் கூறியுள்ளார்.
ஜெலென்ஸ்கி தெரிவிக்கையில், ரஷ்யா எந்த விதமான அமைதியையும் விரும்பவில்லை, மாறாக ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் பிரிக்கவே விரும்புகிறது என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |