மேலும் பல ஆயிரம் மக்களின் மரணத்திற்கு காரணமாகலாம்... ஸ்பெயின் மற்றும் 7 ஐரோப்பிய நாடுகள் கண்டனம்
காஸா பகுதியை மொத்தமாகக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்திற்கு ஸ்பெயின் மற்றும் 7 ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மரணத்திற்கு காரணமாகலாம்
இஸ்ரேலின் அந்த திட்டம் மேலும் பல ஆயிரம் மக்களின் மரணத்திற்கு காரணமாகலாம் என்பதுடன், கிட்டத்தட்ட 1 மில்லியன் பாலஸ்தீன மக்களை அவர்களின் குடியிருப்பில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.
காஸா நகரைக் கைப்பற்றுவதற்கான ஒரு பெரிய நடவடிக்கைக்கான திட்டங்களை முன்னெடுக்க இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பாதுகாப்பு அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
இது உள்ளூரிலும் சர்வதேச நாடுகளாலும் கடும் விமர்சனத்திற்கு இலக்கானது. உண்மையில், ஹமாஸ் படைகளுக்கு எதிரான வெற்றியைப் பதிவு செய்யும் வகையில், காஸா நகரை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு பரிசளிக்கும் வகையிலேஎயே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் ஏற்பட்டதன் பின்னர், காஸா நகரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ட்ரம்ப் முன்னர் கோரிக்கை விடுத்திருந்தார். டர்ம்பின் அந்த கோரிக்கை அப்போதே கடும் விமர்சனங்களுக்கு இலக்கானது.
அதன் பின்னர் அவர் காஸா தொடர்பில் பேசுவதை தவிர்த்தார். ஆனால் அவரது திட்டத்தை தாங்கள் செயல்படுத்த இருப்பதாக இஸ்ரேல் அமைச்சர்கள் சிலர் ஊடகங்களில் பதிவு செய்திருந்தனர்.
தற்போதும் பிரதமர் நெதன்யாகுவும், பிராந்தியத்தில் அமைதி திரும்ப காஸா நகரைக் கைப்பற்ற வேண்டும் என்ற விசித்திர கோரிக்கையை முன்வைத்து வருகிறார்.
இந்த நிலையிலேயே, நெதன்யாகுவின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்பெயின் உட்பட 8 ஐரோப்பிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
8 அமைச்சர்களும் எச்சரிக்கை
அதில், இஸ்ரேல் பிரதமரின் இந்த முடிவு மனிதாபிமான நெருக்கடியை மேலும் மோசமாக்கும் என்றும், எஞ்சியுள்ள பணயக்கைதிகளின் உயிருக்கு மேலும் ஆபத்தை விளைவிக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இஸ்ரேலின் இந்த மூர்க்கத்தனமான நடவடிக்கையானது ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான இறப்புகளுக்கும், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பாலஸ்தீன பொதுமக்களின் கட்டாய இடம்பெயர்வுக்கும் வழிவகுக்கும் என்று அவர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் காஸா நகரத்தின் மீதான தீவிர வலதுசாரி இஸ்ரேல் அரசாங்கத்தின் திட்டமிட்ட தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பு என்பது இரு நாடுகள் தீர்வை செயல்படுத்துவதற்கு ஒரு பெரிய தடையாக இருக்கும் என்றும் 8 அமைச்சர்களும் எச்சரித்துள்ளனர்.
ஸ்பெயின் மட்டுமின்றி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, லக்சம்பர்க், மால்டா, நோர்வே, போர்த்துகல் மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.
இதனிடையே, அமெரிக்கா உட்பட, இஸ்ரேலின் நட்பு நாடுகள் சில பணயக்கைதிகள் மீட்பதை உறுதி செய்வதற்கும், காஸா பகுதியில் மனிதாபிமான நெருக்கடியைத் தணிப்பதற்கும் பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், இஸ்ரேலிய இராணுவ உயர் அதிகாரிகளிடமிருந்து எதிர்ப்புகள் மற்றும் பின்னடைவுகள் இருந்தபோதிலும், காஸா நகரத்தைக் கைப்பற்றும் முடிவில் நெதன்யாகு தொடர்ந்து உறுதியாக இருக்கிறார் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |