உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தையில் இடம் கோரும் ஐரோப்பிய ஆதிக்க சக்திகள்
உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தையில் தங்களுக்கும் இடமளிக்க வேண்டுமென பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி கோரிக்கை விடுத்துள்ளன.
பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட முக்கிய ஐரோப்பிய நாடுகள், உக்ரைனின் எதிர்காலத்தைக் குறித்த எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் தங்களுக்கும் இடம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
உக்ரைனுக்கு வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்களுடன் ஒரு நியாயமான உடன்படிக்கையே நீடித்த அமைதியை உறுதி செய்யும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாரிசில் நடந்த சந்திப்பில் ஐரோப்பிய ஆணையம் மற்றும் ஏழு நாடுகளின் அமைச்சர்கள் உக்ரைன் வெளிவிவகார அமைச்சரை சந்தித்தனர்.
இதில் உக்ரைன் பாதுகாப்பு, எதிர்கால அமைதி பேச்சுவார்த்தை, மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து செயல்திட்டங்களை வகுக்கும் விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.
எதிர்பாராத விதமாக, அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சத் "உக்ரைன் 2014-க்கு முன் இருந்த எல்லைகளை மீண்டும் பெற முடியாது, மேலும் NATO உறுப்பினராக இணைவதும் சாத்யமல்ல" என கூர்மையாக அறிவித்தார்.
இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் பேசி, உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்க ஒப்புக்கொண்டதாக அறிவித்தார்.
ஆனால், இந்த உரையாடல் குறித்து எந்த ஐரோப்பிய நாடுகளுக்கும் முன்கூட்டியே தகவல் வழங்கப்படவில்லை.
அமைதி பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய நாடுகள் இடம்பெறுகின்றனவா என்று கேட்டபோது, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர், "அதற்கான தகவல் எதுவும் இல்லை" என பதிலளித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |