அடுத்த சில நாட்களுக்கு விமான சேவைகளை ரத்து செய்த ஐரோப்பிய அமெரிக்க நிறுவனங்கள்
ஏமனின் ஹவுத்திகளால் ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தை தாக்கியதைத் தொடர்ந்து, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க விமான நிறுவனங்கள் அடுத்த சில நாட்களுக்கு சேவைகளை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமான சேவை நிறுவனங்கள்
இஸ்ரேலின் முதன்மையான சர்வதேச விமான நிலையத்தையே ஹவுதிகள் ஏவுகணையால் தாக்கியுள்ளனர். அதைத் தொடர்ந்து பல வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்கள் டெல் அவிவ் செல்லும் மற்றும் புறப்படும் விமானங்களை நிறுத்தின.
ஜனவரி மாதம் பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸுடன் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்கள் இஸ்ரேலுக்கான விமானங்களை மீண்டும் தொடங்கின.
தற்போது ஹவுதிகளின் ஏவுகணைத் தாக்குதலால் மீண்டும் விமான சேவைகள் முடக்கப்பட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நியூயார்க்கில் உள்ள JFK விமான நிலையத்தில் இருந்து டெல் அவிவ் செல்லும் விமானத்தையும், திங்கட்கிழமை டெல் அவிவிலிருந்து திரும்பும் விமானத்தையும் ரத்து செய்ததாக டெல்டா விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், யுனைடெட் நிறுவனம் இன்னும் நியூவார்க்கில் இருந்து அதன் சேவைகளை ரத்து செய்யவில்லை. டெல் அவிவிலிருந்து டெல்டா மற்றும் யுனைடெட் விமானங்கள் சுமார் 90 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டன.
இதனிடையே, தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை காரணமாக செவ்வாய்க்கிழமை வரை டெல் அவிவ் செல்லும் மற்றும் புறப்படும் விமானங்களை நிறுத்தியுள்ளதாக லுஃப்தான்சா, சுவிஸ், பிரஸ்ஸல்ஸ் மற்றும் ஆஸ்திரிய நாடுகளை உள்ளடக்கிய லுஃப்தான்சா குழுமம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் மற்றும் இஸ்ரேல்
புதன்கிழமை வரை இத்தாலியில் இருந்து இஸ்ரேலுக்கான விமானங்களை ரத்து செய்ததாக ஐடிஏ தெரிவித்துள்ளது, அதே நேரத்தில் ஏர் பிரான்ஸ் ஞாயிற்றுக்கிழமை விமானங்களை ரத்து செய்து, வாடிக்கையாளர்களை திங்கட்கிழமை விமானங்களுக்கு மாற்றப்பட்டதாகக் கூறியது.
ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் இருந்து இஸ்ரேலுக்கான ஏர் இந்தியா விமானங்கள் நிறுத்தப்பட்டன. இஸ்ரேல் விமான நிலைய ஆணையத்தின்படி, ரியானேர் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் கைவிடப்பட்டுள்ளது, ஆனால் திங்கட்கிழமை வழக்கம் போல் விமான சேவைகள் இன்னும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், காஸா பகுதியில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையேயான போரின் ஆரம்ப நாட்களில், ஏமனின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தும் ஹவுதிகள் இஸ்ரேல் மற்றும் செங்கடல் கப்பல் போக்குவரத்தை குறிவைக்கத் தொடங்கினர்.
இந்த நிலையில், மார்ச் மாதம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹவுதிகளின் திறன்களைக் குறைப்பதற்கும், செங்கடலில் வணிகக் கப்பல் போக்குவரத்தை குறிவைப்பதைத் தடுப்பதற்கும் அவர்களுக்கு எதிராக பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்த உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தற்போது முதன்மையான விமான நிலையம் தாக்கப்பட்டுள்ள நிலையில், ஹவுதிகளுக்கு அவர்களால் தாங்க முடியாத அளவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |