நான் இறந்தாலும் எனக்கொரு பிள்ளை வேண்டும்: எதிர்காலத்துக்காக உக்ரைனியர்களின் வித்தியாசமான திட்டம்
ரஷ்ய உக்ரைன் போரின் முடிவு தெரியாத நிலையில், எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக உக்ரைனியர்கள் உயிரணுக்களை உறையவைத்து சேமித்து வைக்க திட்டமிட்டுவருகிறார்கள்.
குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடும் உக்ரைனியர்கள்
அமைதியான தங்கள் சொந்த நாட்டில் தங்களுக்கென ஒரு குடும்பம் வேண்டும் என விரும்பாதவர்கள்தான் யார்?.
உக்ரைனியர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், நாட்டில் போர் நிலவும் நிலையில், குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுகிறார்கள் அவர்கள்.
உக்ரைன் ராணுவ வீரரான Oleksandrக்கு ஒரு மகனும் ஒரு மகளும் வேண்டும் என்று ஆசை. அவரது மனைவியாகிய Kateryna செக் குடியரசில் அகதியாக வாழ்ந்துவருகிறார்.
இருந்தும், தானும் தன் மனைவியும் இணைந்து தங்கள் பிள்ளைகளை வளர்க்கவேண்டும் என ஆசைப்படுகிறார் Oleksandr.
ஆனால், போர் எப்போது முடியும் என தெரியாத நிலை நிலவுவதால், அவர் மட்டுமல்ல, பல உக்ரைன் ராணுவ வீரர்கள் தங்கள் உயிரணுக்களை உறையவைத்து மருத்துவமனைகளில் சேகரித்துவைக்க திட்டமிட்டுள்ளார்கள்.
ஒருவேளை தான் போரில் இறந்துவிட்டால், தன் உயிரணுக்களைப் பயன்படுத்தி தன் மனைவி குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என விரும்புகிறார் Oleksandr.
Oleksandr மட்டுமல்ல, ஆண்கள் பெண்கள் என பொதுமக்கள் பலரும் கூட தங்கள் உயிரணுக்களையும், கருமுட்டைகளையும் எதிர்காலத்துக்காக சேமித்துவைக்கத் துவங்கியுள்ளார்களாம்.
Daria Chernyshova என்னும் 23 வயது மாணவி அவர்களில் ஒருவர்.
போர் நிலவும் நிலையில், தாயாகும் எண்ணமே அச்சுறுத்துவதாக உள்ளதாகத் தெரிவிக்கிறார் அவர்.
ஒரு கட்டத்தில், போர் முடிந்துவிடும், அதனால் கருமுட்டைகளை சேமித்துவைக்க அவசியமில்லை என்று எண்ணியுள்ளார் Daria.
ஆனால், போர் முடிந்தபாடில்லை. ஆக, நாளை என்ன நடக்குமோ தெரியாது. ஆகவே, கருமுட்டைகளை சேமித்துவைப்பதென்னும் முடிவுக்கு வந்துவிட்டேன் என்கிறார் அவர்.
போர் முடிந்து அமைதி திரும்பியதும், கணவன், மனைவி குழந்தைகள் என தங்கள் சொந்த நாட்டில் சேர்ந்துவாழவேண்டும் என்னும் ஆசையுடன் காத்திருக்கிறார்கள் உக்ரைனியர்கள் பலர்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |