ஒரே மாதத்தில் 7 முறை ஏவுகணை சோதனை: உலக நாடுகளை அலறவிடும் வடகொரியா
வடகொரியா மற்றொரு ஏவுகணை சோதனையை முன்னெடுத்துள்ள நிலையில், ஒரே மாதத்தில் மட்டும் இது ஏழாவது ஏவுகணை சோதனை என தகவல் வெளியாகியுள்ளது.
வடகொரியாவின் இந்த நடவடிக்கை உலகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி ஞாயிறன்று பகல் 7.52 மணியளவில் வடகொரியா ஏழாவது ஏவுகணை சோதனையை முன்னெடுத்துள்ளது.
ஜப்பானிய அரசாங்கமும் தென் கொரிய இராணுவ நிர்வாகமும் வடகொரியாவின் ஏவுகணை சோதனையை உறுதி செய்துள்ளனர்.
மேலும், பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையும் அதற்கு முந்தைய ஏவுகணை சோதனைகளும் நமது நாட்டிற்கும், பிராந்தியத்திற்கும் மற்றும் சர்வதேச சமூகத்திற்கும் அச்சுறுத்தல் என ஜப்பானிய நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, இந்தத் தொடர் ஏவுகணை சோதனைகள் ஐநா ஒப்பந்தங்களை மீறுவதாகவும், வடகொரியாவின் இந்தச் செயலுக்கு நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் எனவும் ஜப்பான் குறிப்பிட்டுள்ளது.
வடகொரியா தற்போது சோதனை செய்துள்ள ஏவுகணையானது 30 நிமிட பயணத்தில் 800கி.மீ தொலைவு செல்லக்கூடியது என தெரிய வந்துள்ளது.