கொரோனா உருவானது குறித்து முன்னாள் அமெரிக்க FDA ஆணையர் பரபரப்பு தகவல்
கொரோனா வைரஸ் தொற்று சீனா வுஹான் நகரில் உள்ள ஆய்வகத்திலிருந்து உருவானது என்பதற்கான ஆதராங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக முன்னாள் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக (FDA) ஆணையர் Scott Gottlieb தெரிவித்தார்.
நவம்பர் 2019-ல் ஆய்வகத்தில் பணியாற்றி 3 ஆய்வாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கையை மேற்கோள் காட்டி அமெரிக்காவின் பிரபல செய்தித்தாளான Wall Street Journal அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து Scott Gottlieb இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒரு வருடத்திற்கு முன்பு, கொரோனா இயற்கையாக உருவாகி விலங்குகளிடமிருந்து மனிதர்களிடம் பரவியது என்ற கோட்பாடு ஓரளவு நம்பத்தகுந்ததாகத் தோன்றியது, ஆனால் அதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இதுவரை வெளிவரவில்லை என Gottlieb விளக்கினார்.
இந்த வைரஸ் விலங்குகளிடம் கண்டறிப்பட்டதாக இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. வைரஸ் உண்மையாக எங்கிருந்து தோன்றியது என்பதை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
இருப்பினும், வுஹான் ஆய்வகத்தில் கொரோனா தோன்றியதற்கான சூழ்நிலை ஆதாரங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இருந்தாலும், சட்டவிரோதமாக நடந்ததைப் பற்றி அதிகாரத்தில் உள்ள ஒருவர் வெளிப்படுத்தினாலொழிய, சரியான ஆதாரங்கள் அல்லது தீர்க்கமான முடிவு எதுவும் கிடைக்கப்போவதில்லை என Gottlieb கூறினார்.