மோடி தலைமையில் வளர்ச்சி - பாஜகவில் இணைந்த முன்னாள் CSK வீரர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கேதர் ஜாதவ் பாஜகவில் இணைந்துள்ளார்.
கேதர் ஜாதவ்
2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமானவர் கேதர் ஜாதவ்.
கடைசியாக, 2020ஆம் ஆண்டு ஆக்லாந்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆடினார்.
இடைப்பட்ட காலத்தில், இந்திய அணிக்காக 73 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 2 சதம் மற்றும் 6 அரை சதத்துடன் 1389 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
2018 ஆசியக் கோப்பை, 2019 ஒருநாள் உலகக் கோப்பை, 2017 சாம்பியன்ஸ் டிராபி அணிகளிலும் இடம்பெற்றிருந்தார்.
ஐபிஎல் தொடரில் டெல்லி, பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடிய இவர், 2024 ஆம் ஆண்டு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
பாஜகவில் கேதர் ஜாதவ்
இந்நிலையில், இன்று மும்பையில் நடந்த நிகழ்வில், மகாராஷ்டிர அமைச்சரும், மாநில பாஜக தலைவருமான சந்திரசேகர் பவன்குலே முன்னிலையில் அவர், பாஜகவில் இணைந்துள்ளார்.
இது குறித்து பேசிய கேதர் ஜாதவ், "சத்ரபதி சிவாஜி மகாராஜுக்கு நான் தலைவணங்குகிறேன். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையில், பாஜக வளர்ச்சி அரசியலைச் செய்து வருகிறது.
#WATCH | Former Indian Cricketer Kedar Jadhav joins BJP in the presence of Maharashtra minister and state BJP chief Chandrashekhar Bawankule in Mumbai. pic.twitter.com/4reAKk7F1Y
— ANI (@ANI) April 8, 2025
இது எனக்கு மிகவும் உத்வேகம் அளிப்பதாக நினைக்கிறேன். அவர்களை பின்பற்றி பாஜகவுக்கு என்னால் முடிந்த சிறிய பங்களிப்பைச் செய்வதே எனது நோக்கம்" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நவ்ஜோத் சிங், யூசுப் பதான், மனோஜ் திவாரி, கவுதம் கம்பீர் ஆகியோர் அரசியலில் இணைந்தனர்.
எம்.பி ஆக இருந்த கவுதம் கம்பீர், தற்போது அரசியலில் இருந்து விலகி, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |