வாக்கு எண்ணிக்கை துவங்கும்முன்பே உருவாகியுள்ள பரபரப்பு: இந்தியா கூட்டணியின் கோரிக்கை
இந்தியாவில், ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி துவங்கிய 2024 மக்களவைத் தேர்தல், ஜூன் மாதம் 1ஆம் திகதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. நாளை, அதாவது, ஜூன் மாதம் 4ஆம் திகதி, காலை 8 மணி முதல், நாடு முழுவதும் பதிவாகியுள்ள வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்தியா கூட்டணியின் கோரிக்கை
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை துவங்கும் முன்பே அது தொடர்பான பரபரப்பான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இந்தியா கூட்டணி, தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளதாம்.
அது என்ன கோரிக்கை என்றால், இந்திய மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின்போது, தபால் வாக்குகளை முதலில் எண்ணி முடித்து முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் கடிதம் அளித்துள்ளன.
மத்தியிலும், தமிழ்நாட்டிலும் இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு கடிதங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
ECISVEEP-X
தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், முதலில் தபால் வாக்குகள் மட்டுமே எண்ணப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையரான ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை, சென்னை மாநகராட்சியின் தேர்தல் பணிகளுக்கான தலைமை அதிகாரி ஒருவரிடம் இது குறித்து கேள்வி எழுப்பியபோது, தாங்கள் அதுபோன்ற எந்தவிதமான அறிக்கையையும் வெளியிடவில்லை என்றும், தேர்தல் ஆணைய விதிகளின்படி தபால் வாக்குகள்தான் முதலில் எண்ணப்படும். அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறினார்.
என்ன பிரச்சினை?
அதாவது, வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை முதலில் எண்ணிவிட்டு, பிறகு தபால் வாக்குகளை எண்ணுவதால், தேர்தல் முடிவுகளை மாற்ற வாய்ப்புள்ளது என மத்தியிலும், தமிழ்நாட்டிலும் சில கட்சிகளைச் சார்ந்தவர்கள் கூறியுள்ளார்கள்.
தமிழ்நாட்டில், கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் தற்போதைய சபாநாயகர் அப்பாவு போட்டியிட்டபோதும், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டபோதும், தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படாததால் சில பிரச்சினைகள் ஏற்பட்டன.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் மத்தியில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அமைந்துள்ளதால், நாளை வாக்கு எண்ணிக்கையின்போது முன்போல் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பதாலேயே, தபால் வாக்குகளை முதலிலேயே எண்ண எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |