200 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய புதையலை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கிடைத்துள்ள உற்சாகமூட்டும் செய்தி
போலந்து நாட்டில், நாஸி யுக புதையல்களைத் தேடும் ஒரு குழுவிற்கு ஒரு பெரும் புதையல் கிடைத்திருக்கலாம் என கருதப்படுகிறது.
தெற்கு போலந்திலுள்ள Minkowskie என்ற கிராமத்தில் அமைந்துள்ள 18ஆம் நூற்றாண்டு கால கட்டிடம் ஒன்றில், பூமிக்கடியில் இருக்கும் பொருட்களைக் கண்டுபிடிக்கும் ராடார் ஒன்றின் உதவியுடன் 200 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய புதையல் ஒன்றைத் தேடும் பணி ஒன்று கடந்த ஆண்டு மே மாதம் துவங்கியது.
அந்தக் கட்டிடம், ஹிட்லருடைய பொலிசார் பாலியல் விடுதியாக பயன்படுத்திய ஒரு கட்டிடமாகும். அந்தக் கட்டிடத்தில் வேலை செய்த ஒரு பெண்ணுக்கும், ஹிட்லரின் பொலிசாரில் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. அவர் அந்தப் பெண்ணுக்கு எழுதிய கடிதத்தில், தான் விலைமதிப்பற்ற ஏராளமான பொருட்களை கொடுத்து வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அந்தப் பொருட்கள் அந்தக் கட்டிடத்தில் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
தற்போது அந்தக் கட்டிடத்தில் சுமார் 10 டன் எடையுடைய தங்கம் முதலான புதையலை தாங்கள் கண்டுபிடித்திருக்கக்கூடும் என புதையல் வேட்டை நடத்தும் குழுவின் தலைவரான Roman Furmaniak என்பவர் தெரிவித்துள்ளார்.
அதாவது, அந்த கட்டிடத்தின் ஒரு பகுதியில், பூமிக்கடியில் 10 அடி ஆழத்தில், சுமார் 5 அடி உயரமும் 50 சென்றிமீற்றர் விட்டமும் கொண்ட உலோகப் பாத்திரம் ஒன்று இருப்பது ராடார் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்குள் இரண்டாம் உலகப்போர்க்கால தங்கம் டன் கணக்கில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தங்கம் முதலான பொருட்களில் சில, இரண்டாம் உலகப்போரின் இறுதி கட்டத்தில், மீண்டும் ஹிட்லரின் ஆட்சியை அமைப்பதற்கு உதவுவதற்காக, ஹிட்லரின் பொலிஸ் துறைத்தலைவரான Heinrich Himmler என்பவரது உத்தரவின் பேரில் திருடப்பட்டவையாகும்.
'Gold of Breslau' என்று அழைக்கப்படும், பொலிஸ் நிலையம் ஒன்றிலிருந்து மாயமான தங்கம், தங்கள் நாட்டை ரஷ்யப் படைகள் நெருங்குவதால் அவர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக செல்வந்தர்களான ஜேர்மானியர்கள் ஹிட்லரின் பொலிசாரிடம் கொடுத்துவைத்த தங்கள் நகை முதலான விலையுயர்ந்த பொருட்கள், ஆகியவற்றில் சில இந்த உலோகப் பாத்திரத்தில் மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
அதற்கு ஆதாரமாக, ஹிட்லரின் பொலிசாரில் ஒருவர் எழுதிய டைரி முதலான ஆவணங்கள் கிடைத்துள்ளன (அவர்தான் அந்த கட்டிடத்தில் வேலை செய்த பெண் ஒருவரைக் காதலித்த பொலிசார்).
தற்போது இந்த புதையலை தோண்டி எடுப்பதற்காக அனுமதிக்காக காத்திருக்கிறது அந்த புதையல் வேட்டைக் குழு.