ரஷ்யாவுக்குள்ளேயே வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியுள்ள உக்ரைன்?: எண்ணெய்க்கிடங்கு தீப்பற்றி எரியும் பரபரப்புக் காட்சிகள்
திடீரென ரஷ்யாவுக்குள் இரண்டு இடங்களில் தீப்பற்றியெரியும் நிலையில், அவை உக்ரைன் நடத்திய வெற்றிகரமான தாக்குதல்களின் விளைவு என சந்தேகிக்கப்படுகிறது.
ரஷ்யாவில் இரண்டு இடங்களில் பெரும் வெடிவிபத்துக்கள் நடந்துள்ளதாக பிரித்தானிய பத்திரிகையான Daily Mail சற்று முன் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
உக்ரைன் எல்லைக்கு அருகிலுள்ள Bryansk நகரிலுள்ள எண்ணெய்க்கிடங்கு ஒன்று தீப்பிடித்து எரியும் காட்சிகள் ஒரு பக்கம் வெளியாகியுள்ளன.
மற்றொரு பக்கத்தில், இராணுவ தளம் ஒன்றில் தீப்பற்றியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அந்த செய்தியை ரஷ்ய அதிகாரிகள் உறுதி செய்யவில்லை.
Bryansk நகரிலுள்ள Druzhba எண்ணெய்க்கிடங்கில் தீப்பற்றியெரியும் காட்சிகளை அந்நகரின் அனைத்துப் பகுதிகளிலுமிருந்து பார்க்கும் அளவுக்கு அந்த தீ பயங்கரமாக பற்றி எரிவதை வெளியாகியுள்ள காட்சிகளில் காணலாம்.
இந்த எண்ணெய்க்கிடங்குதான் டான்பாஸ் பகுதியைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ரஷ்யப் படையினருக்கு எரிபொருள் வழங்கும் முக்கிய கிடங்கு என கருதப்படுகிறது.
எண்ணெய்க்கிடங்கில் தீப்பற்றியுள்ளதைத் தொடர்ந்து சுற்றுவட்டாரத்திலுள்ள வீடுகளிலுள்ள மக்கள் வேகமாக வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.