வாடகை கொலையாளியை அனுப்பி பெண்ணைக் கொன்ற நபர்: வெளியான பகீர் பின்னணி
இஸ்ரேலின் ரமேஹ் நகரில் விவாகரத்தான பெண் ஒருவர், அவரது பிள்ளைகள் முன்னிலையில் கொல்லப்பட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளி மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், 32 வயதான Nidal Dagher என்பவர் கடந்த 2021 நவம்பர் மாதம் 30 வயதான Rasha Sitawi என்பவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார்.
இருப்பினும், குறித்த கொலைக்கான உண்மையான நோக்கம் என்ன என்பது இதுவரை வெளிப்படவில்லை என்றே பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
விவாகரத்தான Rasha Sitawi மூன்று பிள்ளைகளின் தாயார். சம்பவத்தன்று தமது 10 வயது மகளுக்கு வீட்டுப்பாடம் தொடர்பில் உதவியபடி இருந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த Nidal Dagher துப்பாக்கியால் சுட இருந்தபோது, Rasha Sitawi அவரிடம் உயிர் பிச்சை கேட்டுள்ளார்.
ஆனால் அந்த நபர், பிள்ளைகளின் அலறலையும் பொருட்படுத்தாமல் Rasha Sitawi-ன் தலையில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, பின்னர் மேலும் இருமுறை சுட்டுவிட்டு அங்கிருந்து மாயமாகியுள்ளார்.
இதனிடையே, கொலை நடந்த சில நாட்களிலேயே குற்றவாளியை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். ஆனால் Sitawi-ஐ தாம் கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
Dagher மீது கொலை, சிறார்களை துன்புறுத்தியது உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் சிலரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
மட்டுமின்றி, இந்த வழக்கில் Nidal Dagher வாடகை கொலையாளி மட்டுமே எனவும், அவரை பயன்படுத்திக் கொண்டவர் தொடர்பில் விசாரித்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.