தடுப்பூசிகள் தொடர்பில் புதிய சட்டம்: பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
பிரான்ஸ் நாட்டின் சுகாதார பாஸ் திட்டத்தை தடுப்பூசி பாஸ் திட்டமாக மாற்றும் சட்டம் ஒன்று பிரான்ஸ் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி பெறாதவர்கள் காபி ஷாப்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் தொலைதூர ரயில்களை பயன்படுத்தவேண்டுமானால் தடுப்பூசி பாஸ் வைத்திருக்கவேண்டும் என்று கூறும் அந்த சட்டம், இந்த வாரத்தில் அமுலுக்கு வர உள்ளது.
நேற்று மாலை இந்த சட்டம் தொடர்பில் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களில் 215 பேர் அதற்கு ஆதரவாகவும், 58 பேர் எதிராகவும் வாக்களிக்க, சட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
கோடை துவங்கி பிரான்சில் சுகாதார பாஸ் திட்டம் ஒன்று அமுலில் உள்ளது. அதாவது, மதுபான விடுதிகள், உணவகங்கள், காபி ஷாப்கள், உடற்பயிற்சிக்கூடங்கள், திரையரங்குகள், சுற்றுலாத்தலங்களை அணுக மற்றும் தொலைதூர ரயில்களைப் பயன்படுத்த, தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரம், சமீபத்தில் கொரோனாவிலிருந்து விடுபட்டதற்கான ஆதாரம் அல்லது கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பதைக் காட்டும் ஆதாரம் ஆகிய இவற்றில் எதையாவது ஒன்றையாவது காட்டினால்தான் மேற்கூறப்பட்ட விடயங்களுக்கு அனுமதி என்ற விதி அமுலில் உள்ளது.
ஆனால், இந்த புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதையடுத்து, இனி மேற்கூறப்பட்ட விடயங்களைப் பயன்படுத்த, கொரோனா தடுப்பூசி பெற்றிருந்தால் மட்டுமே அனுமதியளிக்கப்படும்.
இந்த புதிய சட்டம், இந்த வாரத்தில் அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 21, அதாவது வரும் வெள்ளிக்கிழமை இந்த சட்டம் அமுலுக்கு வரக்கூடும் என கூறப்படுகிறது.
இந்த சட்டத்தைத் தொடர்ந்து, தடுப்பூசி பெறாதோர் பல பொழுதுபோக்கு அம்சங்கள், கலை கலாச்சார அரங்கங்களுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.