வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய நபர் 2 சிறுநீரகங்களும் செயலிழந்து உயிரிழப்பு... வெளிவந்த பதறவைக்கும் உண்மை
வெளிநாட்டில் பணியாற்றி வந்த கேரளாவை சேர்ந்த நபர் விமானநிலையத்தில் இருந்து கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அப்துல் ஜலீல் (42) என்பவர் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் கார் ஓட்டுனராக கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 16ஆம் திகதி சொந்த ஊருக்கு வந்தார் அப்துல்.
அப்போது விமான நிலையத்திற்கு அப்துல் சொன்னபடி அவர் மனைவி முபஷிரா மற்றும் குடும்பத்தார் வந்தனர். ஆனால் அப்துல் அங்கு காணப்படவில்லை, பின்னர் மனைவிக்கு போன் செய்த அப்துல் விரைவில் வீட்டிற்கு வந்துவிடுவேன் என கூறி போனை துண்டித்தார்.
ஆனால் அப்துல் எங்கிருக்கிறார் என்றே குடும்பத்தாருக்கு தெரியாமல் இருந்த நிலையில் கடந்த வியாழன் அன்று பொலிசில் புகார் கொடுத்தனர். அன்றைய தினம் மீண்டும் போன் செய்த அப்துல், பொலிசில் கொடுத்த புகாரை வாபஸ் வாங்குமாறு மனைவியிடம் வற்புறுத்தினார்.
அப்போது அவர் குரலில் ஒரு பயம் மற்றும் நடுக்கம் இருப்பதை மனைவி உணர்ந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் முபஷராவுக்கு ஒரு போன் வந்தது, அதில் பேசிய நபர் உங்கள் கணவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக கூறி துண்டித்தார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது உடல் முழுவதும் காயத்துடன் அப்துல் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிய நிலையில் அப்துல் உயிரிழந்தார்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி அப்துல் தங்கம் கடத்தும் கும்பலுடன் தொடர்பு இருந்துள்ளது. அவர் தங்கத்தை வெளிநாட்டில் இருந்து கொண்டு வருவார் என கும்பல் எதிர்பார்த்த நிலையில் அப்துல் தன்னிடம் சரக்கு எதுவும் இல்லை என கூறியிருக்கிறார்.
இதையடுத்து அவரை கடத்தி சென்ற கும்பல் கொடூரமாக தாக்கி நாள்கணக்கில் சித்திரவதை செய்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு மூளையாக யாயா என்பவர் செயல்பட்டுள்ளார். அவர் தலைமறைவாக உள்ள நிலையில் இதில் தொடர்புடைய 5 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சம்பவம் தொடர்பில் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.