பாலஸ்தீனியர்களை வெளியேற்ற ட்ரம்பின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் இஸ்ரேல்
Israel plan to expel Palestinians from Gaza: காஸாவில் இருந்து பாலஸ்தீனியர்களை மொத்தமாக வெளியேற்றத் திட்டமிடும் இஸ்ரேல்.
காஸா பகுதியிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவதற்கான திட்டங்களுக்கு ஒப்புதல் பெற, டொனால்ட் ட்ரம்பின் ஆதரவை இஸ்ரேல் நாடுவதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் இத்திட்டம் ஒரு சாத்தியமான போர்க்குற்றமாகக் கருதப்பட்டு பரவலாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய செய்தித் தளமான 'Ynet' மற்றும் 'Yedioth Ahronoth' நாளிதழ் ஆகியவை இணைந்து நடத்திய கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், இந்த இடம்பெயர்வு இல்லாமல் காஸா விவகாரத்திற்கு இறுதியில் உண்மையான தீர்வு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும், கடல் வழியாகவோ, வான் வழியாகவோ அல்லது சாத்தியமான அனைத்து வழிகள் மூலமாகவோ அவர்களை வெளியேற்ற இஸ்ரேலிய அரசாங்கம் திட்டமிட்டுத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
காஸா முனையை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவது குறித்தும், அப்போது அப்பகுதியிலிருந்து பாலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்தும் 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ட்ரம்ப் விவாதித்தார்; ஆனால், பின்னர் அந்த எண்ணத்தைக் கைவிட்டார்.
ஆனால், தற்போது அதே திட்டத்துடன் இஸ்ரேல் வாய்ப்புக்காக காத்திருக்கிறது. கடந்த ஆண்டு வெள்ளை மாளிகை வகுத்த 20 அம்ச அமைதித் திட்டம், பாலஸ்தீனர்களை வெளியேற்றுவதற்கு அழைப்பு விடுக்கவில்லை; அத்தகைய நடவடிக்கை பரவலாக 'இனச் சுத்திகரிப்பு' என்று கருதப்பட்டிருக்கும்.
இருப்பினும், காஸாவிலிருந்து பாலஸ்தீனர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதற்கு ஆதரவாகப் பிராந்தியத்தின் பொதுக்கருத்தை மாற்றியமைக்க அமெரிக்காவின் ஆதரவு உதவக்கூடும் என்று காட்ஸ் புதன்கிழமையன்று கூறினார்.
பாலஸ்தீன அகதிகளை ஏற்றுக்கொள்ளுமாறு அண்டை நாடுகளைச் சம்மதிக்க வைப்பதற்கு ட்ரம்ப்பின் ஒப்புதல் மிக முக்கியம் என்றும் அவர் கூறினார்.
மட்டுமின்றி, காஸா மக்களை வெளியேற்றும் திட்டத்தை ட்ரம்ப் கைவிடவில்லை என்றும், தற்போது மட்டுமல்ல எல்லா நேரங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது; இறுதியில், அனைவரின் நலனுக்கும் உகந்த வேறொரு தீர்வு எதுவும் இல்லை என்றே நான் கருதுகிறேன் என்றார்.

இஸ்ரேலில் தேர்தல் களம் தீவிரமடைந்து வரும் சூழலில் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன; இத்தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது வலதுசாரி கூட்டணியும், பாலஸ்தீனர்களுக்கு எதிராக இன்னும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி வாக்காளர்களை ஈர்க்க முயன்று வருகின்றனர்.
காஸா முனையில் உள்ள மஞ்சள் கோட்டிற்கு அருகிலுள்ள இஸ்ரேலிய ராணுவ முகாம் ஒன்றை நெதன்யாகு புதன்கிழமை அன்று பார்வையிட்டார். அப்போது பேசிய அவர், இப்பகுதி எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது, மேலும் நாங்கள் இந்த எல்லைக்கோட்டிலேயே தொடர்வோம் என்றார்.
அத்துடன் ஹமாஸ் படைகளை நிராயுதபாணியாக்குவது மற்றும் காஸாவை இராணுவமயமற்றதாக்குவது ஆகிய எங்கள் இலக்கை அடைய நாங்கள் அனைத்தையும் செய்து வருகிறோம். காஸா இனி இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |