பைஸர் தடுப்பூசி தொடர்பில் இளவயது சிறுவர்களுக்கு எச்சரிக்கை: வெளிவந்த முக்கிய ஆய்வு முடிவு
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இளவயது சிறுமிகளை விடவும் சிறுவர்களுக்கு இதய வீக்கம் ஏற்படும் வாய்ப்புகள் மிக மிக அதிகம் என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
முதன்மை சிறார் மருத்துவமனை ஒன்றின் முக்கிய மருத்துவர்கள் குழு முன்னெடுத்த ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலும் பைஸர் தடுப்பூசியால் குறித்த பிரச்சனை உருவாவதாக மருத்துவர்கள் குழு கண்டறிந்துள்ளது.
முதற்கட்டமாக 15 நோயாளிகளில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் 14 பேர்களும் சிறுவர்கள் என்றே தெரிய வந்துள்ளது. ஆனால், இதய வீக்கம் காரணமாக நோயாளிகள் எவரும் மரணமடையவில்லை என்பது மட்டுமின்றி அவசர சிகிச்சை பிரிவையும் நாடவில்லை என்றே ஆய்வை முன்னெடுத்த நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளனர்.
மேலும், இதய வீக்கத்தால் பாதிக்கப்பட்ட அனைவரும் 5 நாட்களில் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து திரும்பியதாகவும் தெரிய வந்துள்ளது. மிக தீவிரமாக பாதிக்கப்பட்ட சிலர் மட்டும் 2 வாரங்கள் வரையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது.
2021 மே மாதம் அமெரிக்காவின் FDA நிர்வாகம் 12 முதல் 15 வரையிலான சிறார்களுக்கு பைஸர் தடுப்பூசி அளிக்க ஒப்புதல் அளித்தது. அதில் இருந்தே அரிதான பக்கவிளைவுகள் சிறார்களுக்கு ஏற்பட்டதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
மேலும், பைஸர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட இளைஞர்களிடையே இதுவரை சுமார் 1,200 பேர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இது சிறுமிகளைவிடவும் சிறுவர்களுக்கு அதிகம் காணப்பட்டுள்ளது.
12ல் இருந்து 17 வயதுடைய சிறுவர்களில் 63 பேர் பைஸர் தடுப்பூசிக்கு பின்னர் மாரடைப்பு ஏற்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரே, சிறுவர்கள் இதய வீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொண்ட சில நாட்களுக்கு பிறகு மார்பில் வலி காணப்பட்டதுடன், அது 9 நாட்கள் வரையில் நீடித்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.