ஆண்டு இறுதிக்குள்... 32,000 பேர்கள் மரணம்: Omicron தொடர்பில் எச்சரிக்கும் அமெரிக்க நிபுணர்கள்
அமெரிக்காவின் சரிபாதி மாகாணங்களில் Omicron மாறுபாடு பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஆண்டு இறுதிக்குள் 32,000 பேர்கள் கொரோனா பாதிப்பால் மரணமடையக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய கொரோனா மாறுபாடான Omicron அமெரிக்காவின் சரிபாதி மாகாணங்களில் பரவியுள்ள தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை பகல் வெளியிடப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில், Omicron தொற்றானது அமெரிக்காவின் அரிசோனா, அயோவா, மிச்சிகன் மற்றும் வர்ஜீனியா மாகாணங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
Omicron மாறுபாடு தொடர்பில் நிபுணர்கள் தரப்பு அதிக கவனம் செலுத்திவரும் நிலையில், நாடு முழுவதும் ஆபத்தான டெல்டா மாறுபாடு மிக வேகமாக பரவி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் மக்களில் 30 சதவீதம் டெல்டா மாறுபாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. இறப்பு எண்ணிக்கை நாளுக்கும் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் தங்கள் பாதுகாப்பு வளையங்களில் இருந்து வெளியேற வேண்டாம் எனவும், பொது சுகாதாரத்தை பேணவும் மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை விமரிசையாக கொண்டாடலாம் என திட்டமிட்டுவரும் 32,000 மக்கள் ஆண்டு இறுதிக்குள் மரணமடைய வாய்ப்பு அதிகம் என தடுப்பூசி மற்றும் தொற்றுநோய் நிபுணர் கிரிகோரி போலந்து எச்சரித்துள்ளார்.
அந்த 32,000 பேர்களில் ஒருவர் கூட தாம் இறக்க இருப்பதை நம்ப மாட்டார்கள் என்றே அவர் தெரிவித்துள்ளார். ஓமிக்ரான் மாறுபாடானது மிகவும் லேசானது என்றே மக்கள் கருதுகின்றனர்.
ஆனால் வெளியான தரவுகஓள் அனைத்தும் முதற்கட்ட ஆய்வுகளின் அடிப்படையில் கூறப்பட்டவை என்றே மருத்துவர் கிரிகோரி போலந்து சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க மக்கள் சிறிதும் தாமதிக்காமல், தடுப்பூசி போட்டுக்கொள்வதே சிறந்தது என தெரிவித்துள்ள கிரிகோரி போலந்து, தற்போதைய நிலை நீடிக்கும் எனில், உண்மையில் ஜனவரி மாத துவக்கத்தில் பேரிழப்புக்கு மக்கள் தயாராக வேண்டும் என்றார்.
அமெரிக்காவில் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் 43 பேர்களை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தியதில், அவர்களுக்கு லேசான பாதிப்பே ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் சமூக பரவல் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளதுடன், முக்கிய நாடுகளின் தலைவர்களும் அதே கருத்தை பதிவு செய்துள்ளனர். இதனிடையே, இந்த ஆண்டு இறுதிக்குள் பிரித்தானியாவில் ஓமிக்ரான் மாறுபாடால் ஒரு மில்லியன் மக்கள் பாதிக்கப்படலாம் என்று சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித் இந்த வாரம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, வீட்டில் இருந்தே வேலை செய்ய ஊழியர்களை ஊக்குவிக்க வேண்டும் எனவும், மாஸ்க் கட்டாயம் எனவும் சில நிகழ்வுகளில் கலந்துகொள்ள தடுப்பூசி கடவுச்சீட்டு கட்டாயம் பயன்படுத்துதல் போன்ற கடுமையான விதிகளை பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ளார்.
ஓமிக்ரான் மாறுபாடு முதன் முதலில் அடையாளம் காணப்பட்டதாக கூறப்படும் தென்னாபிரிக்காவில் கொரோனா பரவல் கடும் அதிகரிப்பை எட்டியதுடன், வியாழக்கிழமை மட்டும் 22,000 பேர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.