இளவரசர் ஹரி ராஜ குடும்பத்துக்கு இனி திரும்பவே முடியாது: அடித்துக்கூறும் நிபுணர்
இளவரசர் ஹரி இனி ராஜ குடும்பத்துக்கு திரும்பவே முடியாது என்கிறார் ராஜ குடும்ப நிபுணர் ஒருவர்.
அடித்துக்கூறும் நிபுணர்
சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றிற்காக பிரித்தானியா வந்த இளவரசர் ஹரியை தன்னுடன் தேநீர் அருந்த வருமாறு மன்னர் சார்லஸ் அழைத்திருந்தார்.
சுமார் 19 மாதங்களுக்குப் பிறகு சந்தித்துக்கொண்ட இருவரும் சுமார் ஒருமணி நேரம் அளவளாவிக்கொண்டார்கள்.
அதைத் தொடர்ந்து, ஹரி மீண்டும் ராஜ குடும்பத்தில் இணைவாரா என்பதை அறிய அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
ஆனால், இளவரசர் ஹரி இனி ராஜ குடும்பத்துக்கு திரும்பவே முடியாது என்கிறார் ராஜ குடும்ப நிபுணரான ஹியூகோ விக்கர்ஸ் (Hugo Vickers) என்பவர்.
நிபுணர் கூறும் காரணம்
இளவரசர் ஹரி இனி ராஜ குடும்பத்துக்கு திரும்பவே முடியாது என்பதற்கான காரணங்களையும் முன்வைத்துள்ளார் விக்கர்ஸ்.
அதாவது, தன் தந்தையான மன்னர் சார்லஸ் செய்வதற்கு நேரெதிரானவற்றையே ஹரி செய்துவருகிறார் என்கிறார் விக்கர்ஸ்.
ஹரியும் மன்னரும் சமீபத்தில் சந்தித்துக்கொண்ட விடயம் குறித்துக் கூறும் விக்கர்ஸ், அது நல்லதுதான், தந்தையும் மகனும் ஒப்புரவாகுவது மிகவும் அவசியம்தான் என்கிறார்.
ஆனால், ஹரி ராஜ குடும்பப் பொறுப்புகளுக்கு மீண்டும் திரும்ப முடியாது என்கிறார் விக்கர்ஸ்.
ஹரி, சர்ச்சைக்குரிய விடயங்களை செய்வதன் மூலம் மட்டுமே கவனம் ஈர்த்துவருகிறார். அது மன்னரும் ராஜ குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் செய்வதற்கு நேரெதிரானது என்கிறார் அவர்.
’உழைக்கும் ராஜ குடும்ப உறுப்பினர்கள்’ என்னும் ஒரு பதம், மறைந்த மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் பிளாட்டினம் ஜூபிலியிலிருந்து அதிகம் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
அதற்கு, ராஜ குடும்ப கடமைகளை நிறைவேற்றும் ராஜ குடும்ப உறுப்பினர்கள் என்று பொருள், பிரித்தானியாவுக்கு வந்து போய்க்கொண்டு, தங்களுக்காக பணம் பார்ப்பவர்களுக்கு அந்த வார்த்தை பொருந்தாது என ஹரி மேகன் தம்பதியரை கடுமையாக விமர்சிக்கிறார் விக்கர்ஸ்.
ஆக, மன்னர் தன் தாயின் விருப்பப்படி ஒரு விடயத்தில் உறுதியாக இருக்கிறார், அது என்னவென்றால், ராஜ குடும்ப உறுப்பினர்கள் பொறுப்புகளை மேற்கொண்டு நடத்துபவர்களாக இருக்கவேண்டும், இல்லயென்றால், அவர்கள் ராஜ குடும்ப உறுப்பினராக இருக்கமுடியாது என்பதுதான் அது.
ஹரி ராஜ குடும்பத்துக்குத் திரும்ப கொஞ்சம் அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர் அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை. அந்த வாய்ப்பு தற்போது கைநழுவிப்போய்விட்டது.
ஆக, ஹரி தன் மனைவி மேகனுடன் அமெரிக்காவில் வாழ்ந்துகொண்டே அவ்வப்போது பிரித்தானியாவுக்கு வந்துபோய்க்கொண்டு ராஜ குடும்ப உறுப்பினராக இருக்கமுடியாது என்பதில் மன்னர் உறுதியாக இருக்கிறார்.
மன்னருக்கானாலும் சரி, வரி செலுத்தும் மக்களுக்கானாலும், ராஜ குடும்ப உறுப்பினர்களுக்கானாலும் சரி, அது நியாயமும் இல்லை என்கிறார் விக்கர்ஸ்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |