அமெரிக்காவில் கடும் குளிரால் 21 பேர் பலி; இரண்டு நாட்களாக மின்சாரமின்றி தவிக்கும் டெக்சாஸ் மக்கள்!
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான பனிப்புயலால் செவ்வாயன்று குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் தற்போது கடுமையான வானிலை நிலவிவருகிறது. கடும் குளிரால் டெக்சாஸ், லூசியானா, கென்டக்கி, மிசௌரியைச் சேர்ந்த 21 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் சுகர் லேண்ட் டெக்சாஸில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்த நான்கு பேரும் அடங்குவர்.
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் வீசிவரும் கடுமையான பனிப்புயல் காரணமாக டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த மில்லியன் கணக்கான மக்கள் கடந்த இரண்டு நாட்களாக மின்சாரம் இல்லாமல் தவித்துவருகின்றனர்.
வடக்கு மெக்ஸிகோவிலும் சில பகுதிகளில் மின்சாரம் இன்றி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான வானிலை காரணமாக, குழாய்கள் உறைந்ததால் பல வீடுகளில் தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்படுகினறனர்.
கடுமையான குளிரால் COVID-19 தடுப்பூசி மையங்களும் மூடபட்டுள்ளன. மேலும் இந்த முடக்கம் இந்த வார இறுதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், எந்தவொரு அவசரகால வளங்களையும் வழங்க மத்திய அரசு தயாராக உள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் ஆளுநர்களுக்கு ஜனாதிபதி ஜோ பிடன் உறுதியளித்துள்ளார்.
கார்பன் மோனாக்சைடு விஷத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் புரோபேன் ஹீட்டர்களையும், கிரில் அடுப்புகளை வீட்டிற்குள் கொண்டு வர வேண்டாம் என்று டெக்சாஸ் அதிகாரிகள் மக்களை எச்சரித்துள்ளனர்.

