பட்டப்பகலில் சுருண்டு விழுந்து கொத்தாக பலியான ஆயிரக்கணக்கான உயிர்கள்: அதிர்ச்சி காணொளி
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் வெப்ப அலை காரணமாக ஆயிரக்கணக்கான கால்நடைகள் சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் காணொளியாக வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் வெப்ப அலை கொடூரமாக வாட்டி வதைத்து வருகிறது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே, வெப்ப அலை காரணமாக கால்நடைகள் சுருண்டு விழுந்து பலியானதாக கன்சாஸ் மாகாண கால்நடைகள் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய கால்நடைகளின் மரணங்கள் யுலிசிஸில் நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால் காணொளி பதிவு செய்யப்பட்ட பகுதியானது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
இதனிடையே, சமீபத்திய நாட்களில் கன்சாஸில் கடுமையான வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக ஆயிரக்கணக்கான கால்நடைகள் பரிதாபமாக பலியானதாக மாகாண நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
மட்டுமின்றி, அடுத்த சில நாட்களிலும் இதே காலநிலை தொடரும் என்றே மாகாண நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுலிசிஸ் பகுதியில் ஜூன் 11ம் திகதி வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியதாக பதிவாகியுள்ளது.
திங்களன்று வடமேற்கு கன்சாஸில் வெப்பநிலை 108 டிகிரி பாரன்ஹீட்டை எட்டியது எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கன்சாஸின் வடமேற்கு மற்றும் வட-மத்திய பகுதிகள் கடுமையான வறட்சி நிலையை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கன்சாஸ் மாகாணத்தில் கால்நடைகள் பலியாவதற்கு வறட்சி முதன்மை காரணமாக கூறப்பட்டாலும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு உலகளாவிய தானிய விநியோகத்தை கடுமையாக்கியதால் உணவு செலவுகள் அதிகரித்துள்ளதும் ஒரு காரணமாக தெரிவிக்கின்றனர்.
செவ்வாய்க்கிழமை மட்டும் கன்சாஸ் மாகாணத்தில் வெப்ப அலை காரணமாக 2,000 கால்நடைகள் பரிதாபமாக பலியாகியுள்ளதாக மாகாண நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஆனால், இதுவரை வெப்ப அலை காரணமாக 10,000 கால்நடைகள் பலியாகியுள்ளதாக நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
டெக்சாஸ் மற்றும் நெப்ராஸ்காவிற்கு அடுத்தபடியாக கன்சாஸ் மாகாணமானது மூன்றாவது பெரிய அமெரிக்க கால்நடை மாநிலமாகும், இங்குள்ள பண்ணைகளில் 2.4 மில்லியனுக்கும் அதிகமான கால்நடைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.