லண்டன் கண் மருத்துவர் சிரியாவின் கொடூர சர்வாதிகாரியானது எப்படி? முழுமையான பின்னணி
சிரியாவில் பஷர் அல் அசாத்தின் வீழ்ச்சி அரை நூற்றாண்டுக்கும் மேலான குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
24 ஆண்டுகள் ஆட்சி
பஷர் அல் அசாத் தமது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள உள்நாட்டுப் போரை ஆயுதமாக பயன்படுத்தியதையே தற்போது கிளர்ச்சியாளர்களும் முன்னெடுத்து வெற்றிகண்டுள்ளனர்.
சிரியாவின் சர்வாதிகார ஜனாதிபதியாக அசாத் 24 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். உண்மையில் சிரியாவின் ஜனாதிபதியாகும் எண்ணம் அசாத்துக்கு ஒருபோதும் இருந்ததில்லையாம்.
சிரியாவில் அரசியல் களத்தில் இறங்கும் முன்னர் பிரித்தானியாவில் தங்கியிருந்த அசாத், கண் மருத்துவ பயிற்சி மேற்கொண்டிருந்தார். ஆனால் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு அசம்பாவிதம் அவரை அரசியல் களத்தில் தள்ளியது.
லண்டனில் கண் மருத்துவராக பணியாற்றி வந்தவர் அசாத். லண்டனில் தான் அசாத் தமது வருங்கால மனைவியையும் சந்தித்தார். பிரபலமான வங்கி ஒன்றில் பணியாற்றி வந்துள்ள Asma Akhras தனது வேலையை விட்டுவிட்டு அசாத்துடன் அன்றைய தலைவர் முயம்மர் கடாபியின் விருந்தினராக லிபியா சென்றார்.
1994ல் அசாத்தின் மூத்த சகோதரர் பஸ்ஸல் சாலை விபத்தில் கொல்லப்பட அசாத் நாடு திரும்பும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். தொடர்ந்து இராணுவப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, நாட்டை ஆளும் தகுதிக்கு அவர் உயர்த்தப்பட்டார்.
ஒத்துழைப்பை இழந்தார்
2000 ஆண்டு அசாத்தின் தந்தை மரணமடைய, சிரியா மொத்தம் ஒன்று திரண்டு, அசாத் ஜனாதிபதியாக பொறுப்பேற்க வேண்டும் என்று மன்றாடியது. ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிரான, ஊடகங்களை மதிக்கும் ஆட்சியை வழங்குவதாக உறுதி அளித்த அசாத், ஜனநாயக முறைப்படியான ஆட்சியை முன்னெடுக்க முயன்றார்.
ஆனால் தமது தந்தையின் ஆதரவாளர்களின் ஒத்துழைப்பை இழந்தார். அரசியல் குற்றவாளிகளை விடுவித்தார். அரசியல், கலை, கலாச்சாரம் தொடர்பிலான விவாதங்கள் சிரியாவில் மீண்டும் புத்துயிர் பெற்றது.
அவர் பொருளாதாரக் கட்டுப்பாடுகளை மெதுவாக நீக்கி, வெளிநாட்டு வங்கிகளை அனுமதித்து, இறக்குமதிக்கு வழிவகை செய்து, தனியார் துறையை மேம்படுத்தினார். சிரியாவின் நகரங்கள் வணிக வளாகங்கள், புதிய உணவகங்கள் மற்றும் நுகர்வோர் பொருட்களைக் காணத் தொடங்கின, அதே நேரத்தில் சுற்றுலாவும் வளர்ச்சி கண்டது.
2004ல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சிரியாவின் அண்டை நாடான லெபனான் மீதான நீண்ட கால ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவர உத்தரவிட்டது. இதில் அசாத் எடுத்த முடிவு அவரது குடும்பத்தினரை கோபம் கொள்ள வைத்தது.
படிப்படியாக, அசாத் மேற்குலக நாடுகள் பலவீனமாக இருப்பதாக நம்பத் தொடங்கினார், மேலும் அவர் எவ்வளவு வலிமையை வெளிப்படுத்துகிறாரோ, அவ்வளவு அதிகமாக அவர் சாதிப்பார் என்று நம்பினார். 2011 மார்ச் மாதம் அவரது ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வெடித்த நிலையில், அசாத் கொடூரமான முடிவுகளை எடுக்க துணிந்தார்.
தெற்கு நகரமான தாராவில் போராட்டக்காரர்கள் அரசுப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டது. சிரியாவில் முழு அளவிலான உள்நாட்டுப் போர் வெடித்தது.
ரஷ்யாவும் ஈரானும்
14 மில்லியனுக்கும் அதிகமான சிரிய மக்கள் பாதுகாப்பைத் தேடி தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போதிருந்து, அசாத்தின் ஆட்சியானது சாரின், குளோரின் மற்றும் கடுகு வாயு போன்ற இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவது உட்பட அட்டூழியங்கள் பற்றிய பரவலான குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்பட்டது.
2013ல், டமாஸ்கஸ் அருகே கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கவுட்டா மீது நடத்தப்பட்ட வாயு தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அத்துடன், வன்கொடுமை, தலை துண்டித்தல் மற்றும் சித்திரவதை பற்றிய பரவலான புகார்களும் எழுந்தது.
2015ல் ரஷ்யாவும் ஈரானும் அசாத்துக்கு ஆதரவாக சிரியாவில் களமிறங்கியது. ரஷ்யா மற்றும் ஈரான் ஆதரவுடன் அசாத் பெரும்பாலான பிரதேசங்களையும் அனைத்து முக்கிய நகரங்களையும் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார்.
அரசாங்கப் படைகள் 2020ல் வடமேற்கு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இட்லிப் பகுதியை குண்டுவீசித் தாக்கியதில் பொதுமக்கள் கொத்தாக கொல்லப்பட்டனர்.
ஆனால் அனைத்திற்கும் ஒரு முடிவு காலம் ஏற்படும் என்பது போல, ரஷ்யா உக்ரைன் மீது கவனம் செலுத்த, ஈரானும் ஹிஸ்புல்லா தொடர்பில் இஸ்ரேல் நெருக்கடியில் கவனம் செலுத்த சிரிய அரசாங்கத்தின் பாதுகாப்பு அம்பலமானது.
2016 முதல் அரசாங்கம் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அலெப்போவின் வடக்கு நகரத்தின் மீது கிளர்ச்சிப் படைகள் தாக்குதலைத் தொடங்கி, சில நாட்களுக்குள் மின்னல் வேகத்தில் நாடு முழுவதும் கைப்பற்றும் நிலையை எட்டினர்.
தற்போது அசாத் மற்றும் அவரது லண்டன் மனைவியும் புறப்பட்ட விமானம் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |