கடைசி நிமிடத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: ஒலிம்பிக் நிர்வாகம் சூசகம்
ஜப்பான் தலைநகரில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு காணப்படுவதால் ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பில் முடிவெடுக்க நேரிடும் என டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் தொடருக்கான உத்தியோகபூர்வ திறப்பு விழா வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட இருக்கும் நிலையில், இதுவரை ஒலிம்பிக் தொடர்புடைய 67 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், என்ன நேரிடும் என்பதை நம்மால் கணிக்க முடியாது என குறிப்பிட்டுள்ள ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் Toshiro Muto,
கொரோனா பரவல் தொடர்பில் விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் அச்சுறுத்தல் நீடிக்கும் எனில், ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்யவும் வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொற்றுநோய் காரணமாக விளையாட்டுக்கள் ஏற்கனவே ஒரு வருடம் தாமதமாகிவிட்டன, இருப்பினும் பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகளை முன்னெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது என்றார் அவர்.