பேஸ்புக் காதலனுக்காக பச்சிளம் குழந்தை கொலை... இளம்பெண்கள் இருவர் தற்கொலை: சினிமாவை மிஞ்சும் சம்பவம்
இந்தியாவின் கேரளா மாநிலத்தை நடுக்கிய பச்சிளம் குழந்தை கொலை வழக்கில், அதி முக்கிய திருப்பமாக பேஸ்புக் காதலன் யார் என்ற தகவலும், இரு இளம்பெண்கள் தற்கொலைக்கு காரணமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் புதருக்கிடையே பச்சிளம் குழந்தை ஒன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், குழந்தையின் தாயாரான ரேஷ்மா என்பவரை கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், பேஸ்புக் காதலனான அனந்து உடன் வாழ தயாரானதாகவும், காதலன் கட்டாயப்படுத்தியதை அடுத்தே, பிறந்த குழந்தையை புதர்களுக்கு இடையே கைவிட்டதாகவும் ரேஷ்மா தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்த ஜனவரி 5ம் திகதி அதிகாலையில் ரேஷ்மாவின் கணவர் விஷ்ணு என்பவரே தொப்புள் கொடி கூட அகற்றாமல் காணப்பட்ட குழந்தையை புதர்களுக்கு இடையே இருந்து மீட்டுள்ளார்.
தொடர்ந்து தகவல் அறிந்து வந்த பொலிசார், குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்தனர். ஆனால் அன்று மாலையே, குழந்தை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தது.
இதனையடுத்து, பொலிசார் கொலை வழக்கு பதிந்து விசாரணை முன்னெடுத்தனர். பலமுறை அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டும் பொலிசாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்த நிலையில் டி,என்.ஏ சோதனை மேற்கொள்ள முடிவு செய்த பொலிசார், நீதிமன்ற அனுமதியுடன் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சந்தேகத்திற்கிடமான அனைவரது மாதிரியும் சேகரித்து சோதனைக்கு உட்படுத்தினர்.
ஆறு மாதம் நீண்ட இந்த விசாரணையில், மரணமடைந்த குழந்தை ரேஷ்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தது என்பதை பொலிசார் உறுதி செய்ததுடன், ஜூன் 22ம் திகதி ரேஷ்மாவை கைது செய்தனர்.
விசாரணையில், ஏற்கனவே ஒரு பிள்ளை இருப்பதால், இரண்டு பிள்ளைகளுடன் ஏற்க முடியாது என பேஸ்புக் காதலன் கூறியதாலையே, பிறந்த குழந்தையை கைவிட்டதாக ரேஷ்மா கூறியுள்ளார்.
ரேஷ்மா கர்ப்பமாக இருந்ததும் குளியலறையில் குழந்தையை பெற்றெடுத்ததும் கணவரான விஷ்ணுவுக்கும் குடும்பத்தினருக்கும் தெரிந்திருக்கவில்லை என்றே விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இந்த நிலையில் பச்சிளம் குழந்தையை கொலைக்கு தூண்டிய பேஸ்புக் காதலன் தொடர்பில் பொலிசார் விசாரணையை முன்னெடுத்தனர். அதில் ரேஷ்மா பயன்படுத்தி வந்த மொபைல் சிம், கணவர் விஷ்ணுவின் சகோதரரான ரஞ்சித்தின் மனைவி ஆரியாவுக்கு சொந்தமானது என தெரிய வந்தது.
இதனையடுத்து ஜூன் 24ம் திகதி ஆரியாவை விசாரணைக்கு அழைத்தனர். ஆனால், ஜூன் 25ம் திகதி ஆரியா மற்றும் விஷ்ணுவின் சகோதரி மகளான கிரீஷ்மா ஆகிய இருவரும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் மீண்டும் திருப்பத்தை ஏற்படுத்தியது.
தற்கொலை செய்து கொண்ட ஆரியா மற்றும் கிரீஷ்மா ஆகிய இருவருமே அனந்து என்ற பெயரில் பேஸ்புக் காதலனாக நடித்ததும், ரேஷ்மாவுடன் சேட் செய்ததும் அம்பலமானது.
குழந்தை கொலை வழக்கில் தாங்கள் இருவரும் சிக்கலாம் என தெரிந்து கொண்டதும், இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.