உக்ரைனில் தற்கொலை செய்துகொள்ளும் ரஷ்ய வீரர்கள்: வெளிவரும் அதிர்ச்சி காரணம்
உக்ரைனில் விளாடிமிர் புடின் முன்னெடுக்கும் போரின் பயங்கரத்தை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதற்காக ரஷ்ய துருப்புக்கள் தற்கொலை செய்துகொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் துருப்புகளிடம் சிக்கிய ரஷ்ய வீரர்களே குறித்த தகவலை பகிர்ந்துகொண்டுள்ளனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, சிறப்பு இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தொடர்ந்து நீடித்து வருகிறது.
ஆயிரக்கணக்கான வீரர்கள், இராணுவ தளவாடங்கள் என பெரும் அழிவை எதிர்கொண்டு வந்தாலும், தலைநகர் கீவ்வில் இருந்து பின் வாங்கிய ரஷ்ய துருப்புகள் தற்போது கிழக்கு உக்ரைனில் கடுமையான தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
இருப்பினும், பல ரஷ்ய வீரர்கள் உக்ரைன் தரப்பிடம் சரணடைவதும் தொடர்ந்து வருகிறது. சரணடைந்துள்ள வீரர்களே, போர்க்களத்தில் ரஷ்ய துருப்புகளின் நிலை குறித்து அம்பலப்படுத்தியுள்ளனர்.
பல ரஷ்ய வீரர்கள் போருக்கு பயந்து, தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட சிலர் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறி வெளியேற்றப்படும் வகையில், தங்களை காயப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். அனைவரும் பீதியடைந்துள்ளனர், வெளியேற விரும்பியுள்ளனர், ஆனால் அதற்கான வழி இல்லை என ரஷ்ய வீரர்கள் தெரிவித்துள்ளனர்.