Fact check: பாகிஸ்தானில் எரித்து கொல்லப்பட்ட இலங்கையரின் தாயார் அழுவதாக வெளியான புகைப்படத்தின் உண்மைநிலை
பாகிஸ்தானில் எரித்து கொல்லப்பட்ட இலங்கையர் உடலை பார்த்து அவர் தாய் கதறுவது போன்ற ஒரு புகைப்படம் வைரலான நிலையில் அது போலியான புகைப்படம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் சியல்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இலங்கையைச் சேர்ந்த Priyantha Diyawadana (40) பொது மேலாளராக பணியாற்றி வந்தார். இவரது அலுவலக சுவர் அருகே தெஹ்ரீக் - இ - லபைக் என்ற அமைப்பின் மதப் பிரசார போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
அதை பிரியந்தா குமாரா கடந்த மாதம் 3ஆம் திகதி கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டுள்ளார். இதைப் பார்த்த தொழிற்சாலை ஊழியர்கள் அந்த அமைப்பினரிடம் தெரிவித்துள்ளனர். உடனே அந்த அமைப்பைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கானோர் தொழிற்சாலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அத்துடன் அலுவலகத்தில் இருந்த Priyanthaவை வெளியே இழுத்து வந்து கண்மூடித்தனமாக தாக்கியதுடன் உயிரோடு தீ வைத்து எரித்தனர், தீயின் வேதனை தாங்காமல் அலறித் துடித்த பிரியந்தா சில நிமிடங்களில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது இச்சம்பவம் தொடர்பில் ஒரு புகைப்படம் வைரலானது. அதன்படி நபர் ஒருவரின் கருகிய உடலுக்கு முன் பெண் ஒருவர் கதறி அழுவது போன்ற புகைப்படம் சமூகவலைதளத்தில் உலா வருகிறது.
அதாவது Priyanthaவின் உடலை பார்த்து அவர் தாயார் கதறி அழுகிறார் என அதில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த புகைப்படத்தின் உண்மை நிலை குறித்து தெரியவந்துள்ளது.
அதன்படி, அந்த புகைப்படம் தவறானது எனவும்,பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உருவபொம்மையை எரித்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த புகைப்படமானது கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் எடுக்கப்பட்டதாகும். அந்த புகைப்படத்தில் உள்ள பெண்ணின் பெயர் அப்ஷன் லதீப் ஆகும், அவர் ஆதரவற்ற பெண்களுக்களுக்காக அரசால் நடத்தப்படும் நலவாழ்வு மையத்தின் முன்னாள் கண்காணிப்பாளர் ஆவார்.
லதீப், இம்ரான் கான் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் மீது சமூகவலைதளங்களில் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருபவர் என தெரியவந்துள்ளது.