ஓய்வை அறிவிக்க உள்ளாரா பிரதமர் மோடி? மகாராஷ்டிரா முதல்வர் விளக்கம்
பிரதமர் மோடி ஓய்வு பெற உள்ளதாக வெளியான தகவலுக்கு மகாராஷ்டிரா முதல்வர் விளக்கமளித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் சென்ற மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரதமராக பதவியேற்று 11 ஆண்டுகள் ஆன நிலையில், முதல்முறையாக நேற்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமை அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
தொடர்ந்து, அங்குள்ள ஆர்எஸ்எஸ் நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவர் மற்றும் எம்.எஸ்.கோல்வால்கர் நினைவிடங்களுக்கும் சென்று பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அப்போது ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உடனிருந்தார்.
மோடி தனது ஓய்வு குறித்து அறிவிக்கவே ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றதாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற உள்ள மோடி?
இது குறித்து பேசிய அவர், "பிரதமராக பதவியேற்ற பின் முதல்முறையாக மோடி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். தனது ஓய்வு முடிவை ஆர்.எஸ்.எஸ் தலைவர்களிடம் தெரிவிக்கவே அங்கு சென்றாரா?
ஆர்.எஸ்.எஸ் புதிய தலைமை மாற்றத்தை விரும்புகிறது. புதிய பிரதமர் யார் என்ற ஆலோசனை நடைபெற்றுள்ளது. மஹாராஷ்ட்ராவை சேர்ந்தவரையே அடுத்த பிரதமராக ஆர்.எஸ்.எஸ் தேர்வு செய்ய வாய்ப்புள்ளது." என தெரிவித்துள்ளார்.
இந்த கருத்து அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஹுசைன் தல்வாயும், சஞ்சய் ராவத்தின் கருத்தை ஆதரித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வு அறிவிப்பது ஆர்எஸ்எஸ் நெறிமுறை. மோடிக்கு 75 வயதாக உள்ளது. அதனால் ஆர்எஸ்எஸ் அவருடைய ஓய்வு குறித்து ஆலோசிக்கலாம்" என தெரிவித்துள்ளார்.
தேவேந்திர ஃபட்னாவிஸ் விளக்கம்
இந்த சூழலில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், சஞ்சய் ராவத்தின் கருத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், புதிய பிரதமரை தேட வேண்டிய அவசியமில்லை. மோடி தொடர்ந்து பதவியில் இருப்பார்.
தந்தை உயிருடன் இருக்கும்போது, வாரிசுரிமை பற்றிப் பேசுவது முகலாய கலாச்சாரம். பொருத்தமற்றது. நமது கலாச்சாரத்தில் அந்த பழக்கம் இல்லை. எனவே அதை பற்றிய விவாதம் தற்போது இல்லை" என கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |