பிரித்தானியாவில் உணவு வங்கிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்னும் நிலைமை... தொண்டு நிறுவனம் குற்றச்சாட்டு
பிரித்தானியாவில், உணவு வங்கிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என எண்ணும் பிள்ளைகளைக் கொண்ட ஒரு சந்ததியை உருவாக்கிவிட்டோம் என குற்றம் சாட்டியுள்ளது தொண்டு நிறுவனம் ஒன்று.
சொன்ன சொல்லைக் காப்பாற்றாத அரசாங்கம்
லேபர் கட்சியினர் 2024ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, குழந்தைகள் வறுமையை ஒழிக்கப்போவதாகவும், உணவுப்பொட்டலங்களை நம்பி பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வாழும் நிலையை மாற்றப்போவதாகவும் வாக்குறுதி அளித்தனர்.
ஆனால், லேபர் அரசாங்கம் சொன்ன சொல்லைக் காப்பாற்றத் தவறிவிட்டது என்கிறது பிரித்தானியாவில் 1,400 உணவு வங்கிகளை நடத்தும் Trussell என்னும் தொண்டு நிறுவனம்.
பசியால் வாடிய குடும்பங்கள்
கடந்த ஆண்டில், ஆறில் ஒரு பிரித்தானியக் குடும்பம் பசியால் வாடியதாகவும், அதனால், இப்படி கஷ்டப்படுவது சாதாரணம்தான் என்னும் ஒரு மன நிலை உருவாகிவருவதாகவும் Trussell தெரிவித்துள்ளது.
வேலை இருக்கிறது என்னும் ஒரு விடயம் மட்டுமே பசிக்கு எதிராக பாதுகாக்கும் விடயமாக இல்லை என்று கூறும் அந்த தொண்டு நிறுவனம், பேருந்து ஓட்டுநர்கள், முதியோரை கவனித்துக்கொள்ளும் பணி செய்வோர் முதலானவர்கள் சில வேளை உணவை தவிர்க்கும் நிலையிலிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டில், பத்தில் மூன்று பேர் உணவு வங்கிகளை நாடியுள்ளதாகவும், இது 2022ஐ ஒப்பிடும்போது 24 சதவிகிதம் அதிகம் என்றும் Trussell தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் 14 மில்லியன் மக்கள் உனவு பாதுகாப்பின்மையை அனுபவித்ததாகவும், அவர்களில் 3.8 மில்லியன் பேர் சிறுபிள்ளைகள் என்றும் கூறும் Trussell, பிள்ளைகளுக்கு எப்படி புதிய காலணிகள் வாங்குவது, மின் கட்டணம் எப்படி செலுத்துவது, வேலைக்குச் செல்ல பேருந்து கட்டணத்துக்கு என்ன வழி என்னும் கவலையால் பெற்றோர்கள் பலர் தூக்கமிழந்துள்ளதாக தெரிவிப்பதாக தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில், உணவு வங்கிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என எண்ணும் பிள்ளைகளைக் கொண்ட ஒரு சந்ததியை உருவாக்கிவிட்டோம் என்று கூறும் Trussellஇன் கொள்கை இயக்குநரான ஹெலன் (Helen Barnard), இந்த நிலை மாறவேண்டும் என்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |