24 ஆண்டுகளாக அரசு பணியில் இருந்த போலி ஆசிரியை: ஒரே ஒரு போன் மூலம் அம்பலம்
தமிழக மாவட்டம், தேனியில் 24 ஆண்டுகளாக அரசு பணியில் பணியாற்றிய போலி ஆசிரியையின் ஏமாற்று வேலை அம்பலமாகியுள்ளது.
போலி ஆசிரியை
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா கண்டமனுார் அருகே ராஜேந்திரா நகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில், தேனி பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோயில் தெருவை சேர்ந்த விஜயபானு என்பவர் கடந்த 1999 -ம் ஆண்டு இடைநிலை ஆசிரியராக சேர்ந்தார். இவர், சில ஆண்டுகளில் ஓய்வு பெற இருக்கிறார்.
இந்நிலையில், தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு மர்மநபர் ஒருவர் போன் மூலம் தொடர்பு கொண்டு, விஜயபானுவின் சான்றிதழ் பொய்யானது என்றும், மோசடி செய்து பணியில் சேர்ந்ததாகவும் கூறியிருக்கிறார்.
கண்டுபிடித்த அதிகாரிகள்
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், ஆசிரியை விஜயபானுவின் சான்றிதழ்களை ஆய்வு செய்தனர். அப்போது தான் அவர் கொடுத்த 12 -ம் வகுப்பு சான்றிதழ் போலியானது என்று தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஆசிரியை விஜயபானு மீது தொடக்கக் கல்வி மாவட்ட கல்வி அதிகாரி கலாவதி புகார் அளித்தார். அந்த புகாரில் அவர், போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து 24 ஆண்டுகளாக விஜயபானு அரசு பணியில் பணியாற்றி வருவதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இவர் அளித்த புகாரின்படி, ஆசிரியை விஜயபானு மீது பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
You May Like This Video
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |