நீண்ட 600 நாட்கள்... சிட்னி விமான நிலையத்தில் கண்ணீர் மல்க ஆரத்தழுவிய குடும்பங்கள்
அவுஸ்திரே;லியாவில் நீண்ட 600 நாட்களுக்கு பின்னர் சரவ்தேச எல்லைகள் திறக்கப்பட்ட நிலையில், சிட்னி விமான நிலையத்தில் குடும்பங்கள் பல ஆனந்த கண்ணீருடன் ஆரத்தழுவி தங்கள் உறவினர்களை வரவேற்றுள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவுஸ்திரேலியாவுக்கான சர்வதேச எல்லைகள் மூடப்பட்டதுடன், கடுமையான பயணக் கட்டுப்பாடுகளும் அமுலுக்கு கொண்டுவரப்பட்டது.
உலக நாடுகளில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை அமுலுக்கு கொண்டுவந்த நாடுகள் பட்டியலில் அவுஸ்திரேலியா முன் வரிசையில் இருந்தது. மட்டுமின்றி உள்ளூர் மக்கள் எவரும், அண்டை மாநிலங்களுக்கு செல்லவும், குடும்பங்களை சந்திக்கவும் இதனால் முடியாமல் போனது.
மட்டுமின்றி, உள்ளூர் மக்கள் தங்கள் நாட்டை வட கொரியா போன்ற நாடுகளுடனும் ஒப்பிட்டு, விமர்சனம் செய்தனர். தற்போது, நீண்ட 600 நாட்களுக்கு பின்னர், அவுஸ்திரேலியா சர்வதேச எல்லைகளை திறந்துள்ளதுடன், மக்கள் தங்கள் குடும்பங்களை சந்தித்துக்கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது.
பலர் தங்கள் பிள்ளைகளை, உற்றார் உறவினர்களை கடந்த ஓராண்டாக நேரிடையாக சந்திக்க முடியாமல், தொலைபேசியிலும், இணையமூடாகவும் சந்தித்து வந்தனர்.
தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது, உண்மையில் பாராட்டுக்குரியது மட்டுமல்ல, ஓராண்டுக்கு பின்னர் தமது மகனை சந்திக்கப் போகும் வெளிப்படுத்த முடியாத மகிழ்ச்சியில் இருப்பதாக தந்தை ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
நாள் விடிந்து சிறிது நேரம் கடந்த நிலையில், கிங்ஸ்ஃபோர்ட் ஸ்மித் சர்வதேச வருகை முனையத்தில் குடும்பங்கள் பல ஆனந்த கண்ணீருடன் தங்கள் உறவினர்களை வரவேற்றுள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 19 மாதங்களாக, அவுஸ்திரேலியர்கள் அனுமதியின்றி வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. குடும்பங்கள் பல அவுஸ்திரேலியாவின் பல மாகாணங்களில் பிரிந்திருந்தன.
மட்டுமின்றி பல்லாயிரக்கணக்கான அவுஸ்திரேலிய மக்கள் வெளிநாடுகளிலும் சிக்கித் தவித்தனர். சிறப்பு அனுமதி பெற்றுக்கொண்ட சிலர் ஆயிரக்கணக்கான டொலர்களை செலவழித்து குடும்பங்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.
மேலும், 14 நாட்கள் ஹொட்டல் அறையில் தனிமைப்படுத்திக் கொள்ளவும் ஒப்புக்கொண்டனர். குறித்த நிபந்தனைகள் தற்போது நாட்டின் இரண்டு பெரிய நகரங்களான சிட்னி மற்றும் மெல்போர்னில் கைவிடப்பட்டுள்ளன.
மேலும் தடுப்பூசி போடப்பட்ட அவுஸ்திரேலியர்கள் எந்தவிதமான தனிமைப்படுத்தலும் இல்லாமல் வந்து செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.