புடினுக்கு பிரபல நடிகர் விடுத்துள்ள நேரடி வேண்டுகோள்: வைரலாகியுள்ள வீடியோ
டெர்மினேட்டர் திரைப்பட புகழ் ஹாலிவுட் நடிகரான அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் (74), ரஷ்ய அதிபர் புடினுக்கு நேரடியாக வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
சமூக ஊடகம் வாயிலாக அர்னால்ட் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், புடின், நீங்கள்தான் இந்த போரைத் துவக்கினீர்கள், நீங்கள்தான் இந்த போரை நடத்துகிறீர்கள். ஆகவே, நீங்கள் நினைத்தால் இந்தப் போரை நிறுத்தமுடியும் என்று கூறியுள்ளார் அவர்.
அவர் வெளியிட்டுள்ள அந்த ஒன்பது நிமிட வீடியோ வைரலாகியுள்ளது. ஒரு மணி நேரத்திற்குள் அதை 250,000 பேர் பார்வையிட்டுள்ளார்கள்.
உக்ரைனுக்குள் ஊடுருவியிருக்கும் ரஷ்ய வீரர்களுக்கும், ரஷ்யாவிலிருக்கும் மக்களுக்கும் நெகிழவைக்கும் செய்திகளைத் தெரிவித்துள்ள அர்னால்ட், தான் எப்படி ஒரு 14 வயது சிறுவனாக இருந்தபோது, ரஷ்ய பழுதூக்கும் வீரரான Yuri Petrovich Vlasovக்கு ரசிகன் ஆனேன் என்பதிலிருந்து, அவரைப் பார்த்துத்தான், தனக்கும் பழு தூக்கும் வீரராகும் ஆசை வந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய அதிபர் புடின், பொய் சொல்லி ரஷ்ய வீரர்களை உக்ரைனுக்குள் அனுப்பியிருப்பதாக தெரிவித்துள்ள அர்னால்ட், அவர்களில் ஏராளமானோர் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்ற மறைக்கப்பட்ட உண்மையை தனது வீடியோ வாயிலாக ரஷ்ய மக்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இது சட்ட விரோத போர் என்றும், அதனால்தான் உலகமே ரஷ்யாவை எதிர்த்து நிற்பதாகவும் தெரிவித்துள்ள அர்னால்ட், உக்ரைனில் இருக்கும் ஏராளமானோர் ரஷ்யர்களின் உறவினர்கள் என்றும், ஆக, ரஷ்யா வீசும் ஒவ்வொரு குண்டும் தன் சகோதரர்கள் மீது வீசும் குண்டு, தங்கள் சகோதர சகோதரிகளையே ரஷ்ய வீரர்கள் கொல்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
கடைசியாக, புடினுக்கு செய்தி ஒன்றைச் சொல்லும் அர்னால்ட், இது சட்ட விரோதப் போர் என்றும், அதை நிறுத்துமாறும் அவருக்கு நேரடியாக கோரிக்கை விடுத்துள்ளார்.