மெஸ்ஸியின் பெயரை நெற்றியில் பச்சை குத்திய ரசிகர்., இப்போது வருத்தத்துடன் வெளியிட்ட பதிவு
அர்ஜென்டினாவின் தற்போதைய சூப்பர் ஹீரோ லியோனல் மெஸ்ஸியின் பெயரை நெற்றியில் பச்சை குத்திய ரசிகர், இப்போது அதற்காக மிகவும் வருந்துவதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
2022 FIFA உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவின் வரலாற்று வெற்றியால் உற்சாகமடைந்த லியோனல் மெஸ்ஸியின் ரசிகர்கள் கால்பந்து ஜாம்பவான்களுக்கு அர்ப்பணம் செய்வதற்காக அவரது உருவத்தையும் பெயரையும் தங்கள் உடலில் பொறித்து வருகின்றனர்.
அத்தகைய ரசிகர்களில் ஒருவரான கொலம்பியா நாட்டைச் சேர்ந்த சமூக வலைதள பிரபலம் மற்றும் மெஸ்ஸியின் தீவிர ரசிகரான மைக் ஜாம்ப்ஸ் (Mike Jambs) எனும் இளைஞர், அவர் தனது நெற்றியில் "மெஸ்ஸி" என்று பெரிய எழுத்துக்களில் பச்சை குத்தி மேலும் பிரபலமாக அறியப்பட்டார். இதனால் செய்திகளில் வலம் வந்த அவர் மிகவும் உற்சாகமடைந்தார்.
ஆனால், சமூக ஊடகங்களில் தனது புதிய தோற்றம் குறித்து எதிர்மறையான கருத்துகளைப் பெற்ற பின்னர், இந்த முடிவுக்கு வருந்துவதாக அவர் இப்போது ஒப்புக்கொண்டார்.
இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவில், மைக் ஜாம்ப்ஸ் பச்சை குத்துவது சிறந்த யோசனை அல்ல என்று ஒப்புக்கொண்டார். "பச்சை குத்தியதற்காக நான் வருந்துகிறேன், ஏனென்றால் எனக்கு நேர்மறையான விடயங்களைக் கொண்டு வருவதற்குப் பதிலாக, அது தனிப்பட்ட முறையில் மற்றும் எனது குடும்பத்திற்காக நிறைய எதிர்மறையான விடயங்களுக்கு வழிவகுத்தது. நான் இவ்வளவு சீக்கிரம் இதைச் சொல்வேன் என்று நினைக்கவில்லை, முதல் சில நாட்களில் நான் செய்ததைப் பற்றி நான் மிகவும் பெருமைப்பட்டேன், ஆனால் இப்போது நான் அதைச் செய்யாமல் இருந்திருக்க விரும்புகிறேன், ”என்று அவர் வீடியோவில் ஸ்பானிஷ் மொழியில் பகிர்ந்துள்ளார்.
அவர் தனது டாட்டூக்காக கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டதாகவும் விமர்சிக்கப்படுவதாகவும் ஜாம்ப்ஸ் கூறினார், பலர் இந்த டாட்டூவை இன்ஸ்டாகிராமில் லைக்குகளைப் பெறுவதற்கான கேவலமான தந்திரம் என்று அழைத்தனர். சிலர் அதை முட்டாள்தனமான மற்றும் அபத்தம் என்று அழைத்தனர்.
ஆரம்பத்தில், "நான் யாருக்கும் தீங்கு செய்யவில்லை, நான் சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை." என்று தனது செயலை தற்காத்துக்கொண்டார்.
அவர் டிசம்பர் 21, 2022 அன்று அவர் பச்சை குத்துவது போன்ற வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அவர் அந்த வீடியோவை "சவால்களை நிறைவேற்றுகிறேன். ஐ லவ் யூ மெஸ்ஸி" என்று தலைப்பிட்டார்.
அவரது பதிவு வைரலான பிறகு, அவர் அர்ஜென்டினா தொலைக்காட்சியில் நேர்காணல் செய்யப்பட்டார். அதில் "மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நான் கவலைப்படுவதில்லை." என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இப்போது எல்லாம் தலைகீழானது. அவர் தனது முட்டாள்தனமான செயலுக்கு வருந்துகிறார்.