பிரித்தானியாவின் M6 நெடுஞ்சாலையில் பயங்கர கார் விபத்து: 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் பலி
பிரித்தானியாவின் கும்பிரியாவில் உள்ள M6 நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர இரண்டு வாகன விபத்தில் ஐந்து பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த 5 பேர்களில் 2 பேர்கள் சிறுவர்கள் என்பது வேதனைக்குரிய விஷயமாக உள்ளது.
வடக்கு நோக்கிய நெடுஞ்சாலையில் பயணித்த Toyota கார் மீது தவறான திசையில் சென்ற Skoda கார் மோதியதில் இந்த விபத்தானது அரங்கேறியுள்ளது.
5 பேர் உயிரிழப்பு
இந்த கார் விபத்தில் Toyota காரில் பயணித்த கிளாஸ்கோவை சேர்ந்த 42 வயது ஆண், 33 வயது பெண், 15 மற்றும் 7 வயது சிறுவர்கள் என 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதே சமயம் Skoda காரை ஓட்டி வந்த 40 வயது ஆண் ஒருவரும் உயிரிழந்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
Toyota காரில் பயணித்த கிளாஸ்கோவை சேர்ந்த 7 வயதுடைய 3வது சிறுவன் பலத்த காயங்களுடன் நியூகேஸில் உள்ள ராயல் விக்டோரியா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மூடப்பட்ட சாலைகள்
விபத்தை தொடர்ந்து அதிரடிப்படையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இதற்கிடையில் விபத்து காரணமாக M6 நெடுஞ்சாலையில் 36 மற்றும் 39 சந்திப்புக்களுக்கு இடையே உள்ள பகுதி பல மணி நேரம் மூடப்பட்டு பின்னர் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
இந்நிலையில் கார் விபத்தை நேரில் கண்டவர்கள் அல்லது டாஷ்கேமில் பதிவான காட்சிகளை வைத்து இருப்பவர்கள் முன்வந்து தகவல் வழங்குமாறு கும்பிரியா பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |