மலை உச்சியிலிருந்து விழுந்த பிரித்தானியர் மரணம்: கொலை என கூறும் குடும்பத்தினர்
நான்கு பிள்ளைகளுக்குத் தந்தையான பிரித்தானியர் ஒருவர் ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், மலை உச்சி ஒன்றிலிருந்து விழுந்து உயிரிழந்தார்.
கொலை என கூறும் குடும்பத்தினர்
வேல்ஸ் நாட்டைச் சேர்ந்தவரான நாத்தான் ஓஸ்மான் (Nathan Osman, 30), கடந்த செப்டம்பர் மாதம், முதன்முறையாக தன் நண்பர்களுடன் ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
இந்நிலையில், அவர் Benidorm என்னுமிடத்திலுள்ள மலை ஒன்றின் அடியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
அவர் மலையிலிருந்து விழுந்திருக்கலாம். 600 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்ததில் இறந்திருக்கலாம் அல்லது தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டிருக்கலாம் என்று கூறி ஸ்பெயின் பொலிசார் அந்த வழக்கை முடித்துவைத்துவிட்டார்கள்.
ஆனால், அவர் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தார், எந்த கெட்ட பழக்கமும் அவருக்குக் கிடையாது என்று கூறியுள்ள அவரது குடும்பத்தினர் அவர் தன் உயிரை மாய்த்துக்கொள்ள வாய்ப்பே இல்லை என கூறியுள்ளனர்.
அத்துடன், இரவு நேரத்தில் தனியாக இருட்டில் அந்த மலை உச்சிக்கு அவர் சென்றிருக்கவும் மாட்டார் என கூறியுள்ள ஓஸ்மானின் குடும்பத்தினர், அது கொலையாகத்தான் இருக்கும் என்று கூறியுள்ளனர்.
அதற்கு மேலும் ஒரு ஆதாரமாக, அவரிடமிருந்த விலையுயர்ந்த பொருட்கள் எல்லாம் காணாமல் போயிருப்பதும், அவர் உயிரிழந்த சிறிது நேரத்தில், யாரோ அவரது கிரெடிட் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றதும் தெரியவந்துள்ளது.
ஆக, ஓஸ்மான் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, ஸ்பெயின் பொலிசார் அவரது வழக்கை மீண்டும் துவக்க சம்மதித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |