திருமணம் நிச்சயமானதும் வரேன் அப்பா! லண்டனில் கொல்லப்பட்ட இந்திய பெண்- கதறும் தந்தை
பிரித்தானியாவில் இந்தியாவைச் சேர்ந்த இளம்பெண் கொல்லப்பட்ட நிலையில், அவர் திருமணத்திற்கு தயாராகி வந்ததாக அவரது தந்தை வேதனை தெரிவித்துள்ளார்.
லண்டனில் கொலையான இளம்பெண்
இந்திய மாநிலம் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் பெண் கோந்தம் தேஜஸ்வினி (27). லண்டனில் பட்ட மேற்படிப்பை முடித்த இவர், தற்காலிகமாக அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் பிரேசில் நாட்டைச் சேர்ந்த கெவன் அன்டோனியா (23) என்ற இளைஞரால் தேஜஸ்வினி குத்திக் கொல்லப்பட்டார்.
மேலும், உயிருக்கு போராடிய மற்றொரு பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருமண ஏற்பாடு
தற்போது கொலை செய்யப்பட்ட தேஜஸ்வினி திருமணத்திற்கு தயாராகி வந்ததாக தெரிய வந்துள்ளது. அவரது தந்தை கூறுகையில், 'மூன்று ஆண்டுகளுக்கு முன்பு லண்டன் சென்ற அவர், கடந்த ஆண்டு ஆகத்து மாதம் ஹைதராபாத் வந்திருந்தார்.
ஆனால், அடுத்த மாதமே அவர் லண்டன் புறப்பட்டு சென்றுவிட்டார். அதன் பின்னர் கடந்த மாதம் அவர் ஹைதராபாத் வருவதாக இருந்தார்.
நாங்கள் அவருக்கு திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்ததால், திருமணம் நிச்சயம் ஆனதும் இந்தியா வருகிறேன் என கூறிவிட்டு லண்டனிலேயே இருந்துவிட்டார். அதன்படி அவர் விரைவில் அவர் இந்தியா வர இருந்தார்' என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தேஜஸ்வினியின் உடலை தாயகம் கொண்டுவர அவரது உறவினர்கள் தேவையான உதவிகளை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |