'இப்ப நிறுத்த போறியா இல்லையா' கிட்டார் வாசித்த மகனை துப்பாக்கியால் சுட்ட தந்தை! அமெரிக்காவில் பரபரப்பு சம்பவம்
அமெரிக்காவில் 79 வயதான தந்தை, கிட்டார் வாசிப்பதை நிறுத்த மறுத்ததால், தனது 50 வயது மகனை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் அமெரிக்காவில், ஓஹியோ மாகாணத்தில், Blue Ash பகுதியில் நடந்துள்ளது.
பொலிஸ் ஆவணங்களின்படி, ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு மோஹ்லர் சாலையில் உள்ள 3500 பிளாக்கில் தற்செயலாக துப்பாக்கிச் சூடு நடத்ததாக ப்ளூ ஆஷ் பொலிஸாருக்கு அழைப்பு வந்தது.
அந்த அழைப்பில் பேசிய ஃபிரெட் ஹென்ஸ்லி சீனியர் (Fred Hensley Sr.), 79, தனது மகன் கிட்டார் வாசிப்பதை நிறுத்த மறுத்ததாகவும், கடுப்பான அவர் தனது ரிவால்வர் துப்பாக்கியை எடுத்து சுடுவதாக கூறி மிரட்டியதாகவும் கூறினார்.
ஆனால், தனது மகனை தாக்கும் நோக்கத்தில் இல்லை என்றும், அவருக்கு அருகில் சுட நினைத்ததாகவும் கூறினார். ஆனால், அந்த நேரத்தில் பயந்து போன மகன், தன்னை தாக்கியதாகவும், அப்போது தெரியாமல் கைத்தவறி சுட்டதாகவும், அவரே பொலிசிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
Picture: HCSO
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், அங்கிருந்த துப்பாக்கி மற்றும் சுடப்பட்ட குண்டு மற்றும் தோட்டா துளைகள் கொண்ட கிட்டார் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, ஹென்ஸ்லி சீனியர் அவரே 911 ஐ அழைத்துள்ளார். ஆனால் பொலிஸ் அறிக்கையின்படி, தந்தைக்கும் மகனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஹென்ஸ்லி சீனியர் முகம் மற்றும் உதடுகளில் காயங்கள் இருந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மகன் ஹென்ஸ்லி ஜூனியரிடம், மருத்துவமனையில் பொலிஸார் விசாரணை நடத்தியபோது, தனது தந்தையைத் தாக்கியது நினைவிருக்கிறதா என்று விசாரித்தபோது, அவர் இல்லை என்று கூறியுள்ளார்.
தந்தை ஹென்ஸ்லி சீனியர் கைது செய்யப்பட்டு கடந்த இரண்டு நாட்களாக விசாரணையில் இருக்கிறார். இந்நிலையில், அவரது ஜாமீன் தொகை 60,000 டொலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.