ஜோ பைடன் பதவியேற்பதற்குள்.. எச்சரிக்கும் எஃப்.பி.ஐ! எதற்கும் தயாராக இருக்கும் பாதுகாப்பு அதிகாரிகள்
ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவியேற்பதற்குள் வரும் நாட்களில் அமெரிக்கா முழுவதும் ஆயுத ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக எஃப்.பி.ஐ எச்சரித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கு எதிராக போட்டியிட்டு வென்ற ஜோ பைடன் வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.
இதற்கிடையில், கடந்த ஜனவரி 6-ஆம் திகதி அமெரிக்க காங்கிரஸ் அதிகாரிகள், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனின் வெற்றியை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதற்காக கூடினர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக ஆயிரக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டு பெரும் கலவரத்தை நிகழ்த்தினார்.
காவலர்களைத் தாண்டி நாடாளுமன்றத்திற்குள்ளே வரை சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜன்னல்கள், கதவுகள் மற்றும் அங்கிருந்த பொருட்களளை சேதப்படுத்தினர். மேலும் அங்கிருந்த அதிகாரிகளை தாக்க முயன்றனர். இந்த கலவரத்தில் ஒரு கேபிடல் காவல் அதிகாரி உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
மிகப்பெரிய ஜனநாயக நாடான அமெரிக்காவின் நாடாளுமன்றத்திலேயே இவ்வாறு நடந்தது உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் "இது ஜனநாயகத்தின் மீதான நேரடியான பெரும் தாக்குதல்" என கண்டனங்களை வெளிப்படுத்தினர்.
திங்களன்று, செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன் அமெரிக்க கேபிட்டலுக்கு வெளியே பதவிப் பிரமாணம் செய்வதில் தனக்கு எந்த பயமும் இல்லை என்று கூறினார்.
என்ன நடந்தாலும், அவரும் துணை தலைவராக தேர்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸும் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே தான் பதவி பிரமாணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவியேற்பதற்குள் வரும் நாட்களில் அமெரிக்கா முழுவதும் பல இடங்களில் டிரம்ப் ஆதரவாளர்கள் ஆயுத ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகல் அதிகம் இருப்பதாக எஃப்.பி.ஐ எச்சரித்துள்ளது.
ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்பு விழாவில் ஆயுதம் ஏந்திய குழுக்கள் 50 மாநில தலைநகரங்களிலும், வாஷிங்டன் டி.சியிலும் ஒன்றுகூட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், ஜனவரி 6-ம் திகதி போல் மீண்டும் ஒரு அத்துமீறல் நிகழாது என்று பாதுகாப்பு அதிகாரிகள் உறுதியாக உள்ளனர், மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக செயல்படுத்தப்படவுள்ளன.
பதவி பிராமணம் எந்த பிரச்சினையும் இல்லாமல் நடக்க 15,000 தேசிய காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

