புடினின் கோர முகம்... சொந்த நாட்டைவிட்டு தப்பிச்செல்லும் ஆயிரக்கணக்கான ரஷ்ய மக்கள்
உக்ரைன் விவகாரத்தில் உலக நாடுகளின் நெருக்கடியை தொடர்ந்து தமது நாட்டின் எல்லைகளை புடின் மூடிவிடலாம் என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா உலக நாடுகளின் நெருக்கடியை எதிர்கொண்டால், ஜனாதிபதி விளாடிமிர் புடின் அந்த ஆத்திரத்தை சொந்த மக்கள் மீது காட்டலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ஒருகட்டத்தில் ரஷ்யாவை விட்டு வெளியேற முடியாத சூழல் உருவாகலாம் என்ற அச்சத்தில், ஆயிரக்கணக்கான ரஷ்ய மக்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
St Petersburg நகரில் இருந்து புறப்படும் ரயில்களில் பெட்டி படுக்கைகளுடன் நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல தற்போது இந்த ஒரேயொரு வழித்தடம் மட்டுமே ரஷ்ய மக்களுக்கு செயற்பாட்டில் உள்ளது.
மேற்கத்திய நாடுகள் பல விமான சேவைகளை ரத்து செய்துவரும் நிலையில், ரஷ்ய மக்கள் வேறுவழியின்றி ரயில் சேவைகளை நாடி வருகின்றனர். மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் கண்டிப்பாக அப்பாவி மக்களையே பெரும்பாலும் பாதிக்கும் என்பதால், சாதாரண மக்கள் தங்கள் உடமைகளுடன் இப்போதே நாட்டைவிட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர் என்றே கூறப்படுகிறது.
விளாடிமிர் புடினின் பிடிவாத குணத்தால், அடுத்த ஒருவாரத்தில் நாட்டில் என்ன நடக்கும் என்றே தெரியாது என கதறும் ரஷ்ய அப்பாவி மக்கள், இப்போதே நாட்டைவிட்டு வெளியேறிவிடுவது உயிருக்கேனும் உத்தரவாதமாக இருக்கும் என்கிறார்கள்.
இதனிடையே, உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் முன்னெடுத்த பின்னர், குறிப்பிட்ட ரயில் சேவையை பயன்படுத்தும் ரஷ்ய மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பின்லாந்த் ரயில்சேவை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, உக்ரைன் மீதான படையெடுப்பை கைவிடக்கோரி போராட்டத்தில் குதித்த சுமார் 7,670 ரஷ்ய மக்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டுமின்றி, ரஷ்ய ஜனாதிபதி புடினின் இரத்தவெறிக்கு பயந்து சுமார் 1 மில்லியன் மக்களுக்கும் அதிகமானோர் உக்ரைனில் இருந்தும் அண்டை நாடுகளுக்கு வெளியேறியுள்ளனர்.