ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனில் போரிட்ட அமெரிக்க உளவுத்துறை அதிகாரியின் மகன் படுகொலை
அமெரிக்க உளவுத்துறை அதிகாரியின் மகன் என அடையாளம் காணப்பட்ட ஒரு அமெரிக்க நபர், 2024 ஆம் ஆண்டு கிழக்கு உக்ரைனில் ரஷ்ய இராணுவத்திற்கான ஒப்பந்தத்தின் கீழ் சண்டையிட்டபோது கொல்லப்பட்டார்.
கிழக்கு ஐரோப்பாவில் இறந்தார்
அவரது குடும்பத்தினரால் வெளியிடப்பட்ட இரங்கல் செய்தியில் 21 வயதான மைக்கேல் அலெக்சாண்டர் க்ளாஸ், ஏப்ரல் 4, 2024 அன்று கிழக்கு ஐரோப்பாவில் இறந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 2024 இல் மத்திய புலனாய்வு அமைப்பில் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளுக்கான துணை இயக்குநராக நியமிக்கப்பட்ட ஜூலியான் கல்லினாவின் மகனாவார் உக்ரைனில் கொல்லப்பட்ட மைக்கேல் க்ளாஸ்.
அமெரிக்காவின் மீதான உள்நாட்டு கோபமும், ஒன்லைன் தீவிரமயமாக்கலும், நடுத்தர வர்க்க அமெரிக்க இளைஞரை கிழக்கு உக்ரைனின் கொலைக் களங்களுக்கு இட்டுச் சென்றுள்ளது.
இராணுவத்தில் பணியாற்றிய பெற்றோருக்குப் பிறந்த ஒரு உயர்நிலைப் பள்ளி கால்பந்து வீரர் இந்த மைக்கேல் குளோஸ். புலன்விசாரணை இணையபக்கம் ஒன்றில், பிப்ரவரி 2022 முதல் ரஷ்ய இராணுவத்துடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட 1,500க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரில் க்ளாஸும் ஒருவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில், க்ளாஸ் பாலின சமத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் ஆதரவு வட்டாரங்களில் தீவிரமாக செயல்பட்டுள்ளார். இஸ்ரேலுக்கும் காசா போருக்கும் அமெரிக்கா அளித்த ஆதரவிற்காக அவர் தமது கோபத்தை வெளிப்படுத்தி வந்தார்.
ரஷ்யா முழுவதும் பயணம்
துருக்கியில் இருந்தபோது, க்ளாஸ் ரஷ்யாவுக்குச் செல்லும் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் வழக்கமாக பாலஸ்தீனம் பற்றிய வீடியோக்களை கவனிப்பதுடன் அமெரிக்கா மீது மிகவும் கோபமாக இருந்தார் என்றே அவருக்கு நெருக்கமான ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவிற்கு விசா பெற்ற பிறகு, அவர் மாஸ்கோவிற்கு செல்வதற்கு முன்பு ரஷ்யா முழுவதும் பயணம் செய்தார், அங்கு அவர் தனது ஆவணங்கள் காலாவதியாகும் முன்பு இராணுவத்தில் சேர்ந்தார்.
அங்கு அவர் பெரும்பாலும் நேபாள ஒப்பந்த வீரர்களுடன் பயிற்சி பெற்றார். இராணுவத்தில் சேர்ந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு அவர் உக்ரைனுக்கு ஒரு தாக்குதல் பட்டாலியனின் உறுப்பினராக அனுப்பப்பட்டார்.
ஆனால் அவர் மரணம் தொடர்பில் விளக்கங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை. அவரது பெற்றோர் ரஷ்ய அரசாங்கத்தைத் தொடர்புகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |