நோய்த்தொற்று அதிகரிப்பு... HIV-யை தேசிய அவசரநிலையாக அறிவித்த ஃபிஜி
Fiji declares HIV a national emergency: ஃபிஜி எச்.ஐ.வி-யை தேசிய அவசரநிலையாக அறிவித்துள்ளது.
எச்.ஐ.வி (HIV) பாதிப்புகள் அதிகரித்து வருவதால் ஃபிஜி நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது; அத்துடன் பரிசோதனை, சிகிச்சை மற்றும் தடுப்புச் சேவைகளுக்கான அணுகல் வசதிகளும் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.
குழந்தைகளின் எண்ணிக்கை
பசிபிக் பெருங்கடலில் உள்ள இந்தச் சிறிய தீவுக்கூட்டத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 167 பெரியவர்களில் ஒருவருக்கு தொற்று இருந்த நிலையில், தற்போது சுமார் 60 பெரியவர்களில் ஒருவர் அந்த தொற்றோடு வாழ்ந்து வருகின்றனர்.

அத்துடன், எச்.ஐ.வி (HIV) தொடர்பான சிக்கல்களால் மரணமடையும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பத்து லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட இந்த நாட்டில், 2025-ஆம் ஆண்டில் மட்டும் 2,016 பேருக்குப் புதிதாக நோய் பாதிப்பு கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சர் அன்டோனியோ லாலாபலவு தெரிவித்தார்;
மேலும், நோய் பரவல் தீவிரமடையும் சூழலில் மேற்கொள்ளப்படும் வழக்கமான நடவடிக்கைகள் இனி போதுமானதாக இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் பயன்பாடு, பாதுகாப்பற்ற பாலியல் உறவு, ஊசிகளைப் பகிர்ந்துகொள்ளுதல் ஆகியவற்றின் அதிகரித்துவரும் போக்கே இந்தத் தொற்றுநோய்க்கு அடிப்படையாக அமைகிறது.
மட்டுமின்றி, இன்னொரு ஆபத்தான முறையும் இங்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. நரம்பு வழியாக போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள், ஏற்கனவே போதையில் இருக்கும் நபர்களின் இரத்தத்தை ஊசி மூலம் செலுத்தும் அபாயகரமான பழக்கம், குறிப்பாக ஆப்பிரிக்கா மற்றும் பசிபிக் பகுதிகளில் உலகளாவிய எச்.ஐ.வி. அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது.
தங்களின் எச்.ஐ.வி நிலை
மற்றொன்று, ஒரே ஒரு சிரிஞ்ச் மட்டும் பயன்படுத்தும் முறை; ஃபிஜியில் சிரிஞ்சுகள் கிடைப்பது அரிது. மக்கள் முன்வந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் மீதான ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டுத் திட்டத்தின்படி, 2025-ஆம் ஆண்டில் எச்.ஐ.வி-யுடன் வாழும் 9,100 ஃபிஜியர்களில், 39 சதவீதம் பேர்கள் மட்டுமே தங்களின் எச்.ஐ.வி நிலையை அறிந்திருந்தனர் மற்றும் 22 சதவீதம் பேர்கள் மட்டுமே எச்.ஐ.வி எதிர்ப்பு மருந்து சிகிச்சையைப் பெற்று வந்தனர். எச்.ஐ.வி (HIV) பாதிப்புள்ளவர்களில் 78% பேர் சிகிச்சையைப் பெறும் உலகளாவிய சராசரிக்கு இது முற்றிலும் முரணாக உள்ளது.