புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு
பின்லாந்தில் 10 லட்சம் பேர் வரை தங்கும் வசதி கொண்ட நிலத்தடி நகரம் உருவாக்கப்பட்டுள்ளது.
நிலத்தடியில் நகரம்
ஐரோப்பிய நாடான பின்லாந்து, 1954ஆம் ஆண்டு முதல் 1,200 சதுர மீற்றருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட கட்டிடங்களின் அடியில், குண்டுத் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் அறையை அமைப்பது கட்டாயம் என்று சட்டம் இயற்றியுள்ளது.
அதன்படி, தலைநகர் ஹெல்சின்கியின் நிலத்தடியில் நகரம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்நகரின் தெருக்களில் காணப்படும் எண்ணற்ற சானா குளியல் நிலையங்கள் மற்றும் காபி கடைகளுக்கு அடியில், ஒரு இரகசிய 'இரண்டாவது நகரம்' உள்ளது; பேரிடர் ஏற்படும் வரை இது பயன்பாடின்றி அமைதியாக இருக்கும்.
ஒருவேளை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) அணு ஆயுதத் தாக்குதலை நடத்தினால், 10 லட்சம் பேர் வரை தங்கும் வசதி கொண்டதாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.
தலைநகருக்கு அடியில் பாறைப் படுகையில் 5,500-க்கும் மேற்பட்ட பாதுகாப்பான நிலத்தடி அறைகள் (Shelters) குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. நகரின் மொத்த மக்கள் தொகையே 6,75,000 மட்டுமே என்ற நிலையில், 10 லட்சம் தங்கலாம் என்பது மிகப்பெரிய அளவாகும்.
இரண்டாம் உலகப் போரின் ஒரு பகுதியாக, 'Winter War' என்று அழைக்கப்பட்ட நீண்ட மோதலின்போது ரஷ்யா அந்நாட்டின் மீது படையெடுத்த 1939-ஆம் ஆண்டில் இருந்தே, பின்லாந்து இத்தகைய பாதுகாப்பு நிலத்தடி அறைகளை தொடர்ந்து கட்டி வருகிறது.

இதுபோன்ற மிகப்பெரிய பாதுகாப்பு அறைகளில் Merihaka என்பதும் ஒன்றாகும். 71,000 கன மீற்றர் கொள்ளளவு கொண்ட இந்த பதுங்குக் குழி, ஏறக்குறைய ஒரு 7 மாடி அலுவலகக் கட்டிடத்தின் கன அளவிற்கு சமமானது.
'போருக்கு தயாராகும் நாடு'
இதில் விளையாட்டுத் திடல்கள், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் தரைக்குக் கீழே 25 மீற்றர் ஆழத்தில் ஒரு சிறுவர் விளையாட்டு மைதானம் ஆகியவை உள்ளன. உள்ளூர்வாசிகள் இதில் தங்குவதற்கு பழகிக் கொள்ளும் வகையில் இவை தினமும் பயன்பாட்டில் இருக்கின்றன.
அவசரகாலத் தேவை ஏற்பட்டால், 72 மணிநேரத்திற்குள் இதை அடுக்கு படுக்கைகள், நீர்த் தொட்டிகள் மற்றும் நடமாடும் கழிப்பறைகள் கொண்ட சேமிப்புக் கிடங்குகளாக மாற்றியமைக்க முடியும்.
ஹெல்சின்கியில் உள்ள 48 பெரிய தங்குமிடங்களில் மெரிஹாக்காவும் ஒன்றாகும். நகரம் முழுவதும் மிகவும் பரவலாக தங்குமிடங்கள் இருப்பதால், சில ஹெவி மெட்டல் இசைக்குழுக்களுக்கான ஒத்திகை பகுதிகளாக கூட பயன்படுத்தப்படுகின்றன.
இதுபோன்ற நிலத்தடி நகர நடவடிக்கையால் 'போருக்கு தயாராகும் நாடு' என்ற பெயர் மூலம் பின்லாந்து உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |